ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ-வான சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் மற்றும் வீடியோகான் குழும நிறுவனர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது 3,250 கோடி கடன் மோசடி வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்திய வங்கி துறையை அதிர்ச்சியில் ஆழ்த்திய மோசடிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது ஐசிஐசிஐ வங்கியில் நடந்த மோசடி. சந்தா கோச்சார் ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ-வாக இருந்த காலக்கட்டத்தில் அவரது கணவர் தீபக் கோச்சார் தலைவராக இருந்த நிறுவனத்திற்கு சாதகமாக இருக்க வீடியோகான் குழும நிறுவனர் வேணுகோபால் தூத்-க்கு அதிகப்படியான கடன் கொடுக்கப்பட்டது. இது மட்டும் அல்லாமல் சந்தா கோச்சார் நிர்வாக காலத்திலேயே இந்த கடன் வாராக் கடனாவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த மோசடி குறித்து பல வருடங்களாக சிபிஐ விசாரணை செய்து வரும் வேளையில், தற்போது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவுகள் 120-பி (குற்றச் சதி) மற்றும் 409 (குற்றவியல் நம்பிக்கை மீறல்) மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகள் உள்ளிட்டவை கீழ் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. சிபிஐ தரப்பில் இருந்து வெளியான தகவல் படி நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் உட்பட ஒன்பது பெயர்கள் குற்றப்பத்திரிக்கையில் பெயரிடப்பட்டு உள்ளது.

ஐசிஐசிஐ வங்கியில் இருந்து சந்தா கோச்சார் மீது வழக்குத் தொடர அனுமதி பெறாமலேயே, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் சிபிஐ அனுமதி கோரி வங்கிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதற்கான பதிலுக்காக காத்திருக்கிறது சிபிஐ.

பொதுவாக, சிறப்பு நீதிமன்றம் குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு முன், அனுமதிக்காகக் காத்திருக்கும் பின்னர் உத்தரவாதம் அளிக்கப்பட்டால் விசாரணையைத் தொடங்கும். இதனால் சிபிஐ, சிறப்பு நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட குற்றப்பத்திரிகையை இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 2022ஆம் ஆண்டு டிசம்பரில் சந்தா கோச்சார், தீபக் கோச்சார் மற்றும் தூத் ஆகியோரை சிபிஐ கைது செய்தது.


Click it and Unblock the Notifications