ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்திய சில மணி நேரங்களில் ஐசிஐசிஐ வங்கி மற்றும் அரசுக்கு சொந்தமான பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட பல தனியார் கடன் வழங்குநர்கள் பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளன.
இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு ரெப்போ விகிதத்தை 4.90 சதவீதத்தில் இருந்து 5.40 சதவீதமாக கடந்த வெள்ளியன்று உயர்த்தியது.
இதன் காரணமாக ஐசிஐசிஐ வங்கி உள்பட ஒருசில பிரபல வங்கிகள் கடன் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இது குறித்து தற்போது பார்ப்போம்.
ஐசிஐசிஐ வங்கி
ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதை அடுத்து ஐசிஐசிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிப்புற பெஞ்ச்மார்க் கடன் விகிதம் இப்போது 9.10% என உயர்த்தி உள்ளது. இந்த வட்டி உயர்வு ஆகஸ்ட் 5 முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கி இந்த மாதம் நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தை (எம்சிஎல்ஆர்) அனைத்து தவணைக்காலங்களிலும் 0.15% என திருத்தியுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி
ரெப்போ வட்டி விகித உயர்வால் எக்ஸ்டெர்னல் பெஞ்ச்மார்க் கடன் விகிதத்தை 7.90% ஆக உயர்த்தியுள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம் அதிகரித்ததன் விளைவாக, ரெப்போவுடன் இணைக்கப்பட்ட கடன் விகிதம் (RLLR) ஆகஸ்ட் 8 முதல் அதாவது இன்று முதல் 7.40% இலிருந்து 7.90% ஆக திருத்தப்பட்டுள்ளது" என்று பஞ்சாப் நேஷனல் வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஏ-ரேட்டட் கார்ப்பரேட் கடன்
மேலும், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) மற்றும் ஏ-ரேட்டட் கார்ப்பரேட் கடன் வாங்குபவர்கள் உள்ளிட்ட மாநில மற்றும் மத்திய அரசின் உத்தரவாத நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகளுக்கான ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட கடன் விகிதங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.
பேங்க் ஆஃப் பரோடா
பாங்க் ஆஃப் பரோடா வெளியிட்டுள்ள அறிக்கையில், அதன் ரெப்போ-இணைக்கப்பட்ட கடன் விகிதத்தின் கீழ் பொருந்தக்கூடிய சில்லறை கடன்கள், இனிமேல் 7.95 சதவீத வட்டி விகிதத்தை கொண்டிருக்கும் என அறிவித்துள்ளது. ஒரு வருடம் முதல் மூன்று வருடங்களுக்கும் குறைவான காலத்திற்கான கடன் விகிதங்கள் 7.40 சதவீதம் முதல் 7.80 சதவீதம் வரை இருக்கும் என்று பேங்க் ஆஃப் பரோடா வங்கி தெரிவித்துள்ளது.
மற்ற வங்கிகள்
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதை அடுத்து எஸ்பிஐ உள்ளிட்ட மற்ற வங்கிகள் வட்டி விகித உயர்வு குறித்த அறிவிப்பை அடுத்தடுத்து வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications