சென்னை: ஐசிஐசிஐ வங்கியின் மொபைல் பேங்கிங் செயலியான iMobile Pay-யில் மிகப்பெரிய பிரச்சனை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ வாடிக்கையாளர்கள் தங்களின் கணக்கில், வேறு வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு விவரங்களைப் பார்க்க முடிவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றாக இருக்கும் ஐசிஐசிஐ வங்கி, நாட்டின் மொத்த கிரெடிட் கார்டு வர்த்தகத்தில் மார்ச் 2024 நிலவரப்படி 16.6% பங்கீட்டை கொண்டு உள்ளது. இப்பிரிவில் 3வது பெரிய நிறுவனமாகவும் உள்ளது.

இந்த நிலையில் சமூக ஊடக தளமான X-ல் (எக்ஸ்) டெக்னோஃபினோ (TechnoFino) நிறுவனர் சுமந்த மண்டல் செய்த பதிவு ஒட்டுமொத்த ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களையும் தூக்கி வாரிப்போட்டு உள்ளது. இந்த பதிவில் என்ன கூறியிருக்கிறார்..?
சுமந்த மண்டல் தனது பதிவில் ஐசிஐசிஐ வங்கி iMobile Pay செயலியில் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு உள்ளது. ஐசிஐசிஐ வாடிக்கையாளர்கள் தங்களின் கணக்குக்கு பதிலாக வேறு வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு விவரங்களைப் பார்க்க முடிவதாக தெரிவித்தார். மேலும் ஐசிஐசிஐ வங்கி மற்றும் ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆகியவற்றை டேக் செய்து, இந்த பிரச்சனையை விரைவாக சரி செய்ய வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் அவருடைய பதிவில் "iMobile Pay செயலியில் முழு கார்டு எண், காலாவதி தேதி மற்றும் CVV எண் ஆகியவை iMobile செயலியில் தெளிவாகக் காட்டப்படுவதால், இதன் மூலம், ஒருவர் பிறருடைய கிரெடிட் கார்டு தகவல்களைத் தவறாகப் பயன்படுத்த இது வழிவகுக்கும்," என்று சுமந்த மண்டல் தனது பதிவில் குறிப்பிட்டு உள்ளார்
பல பயனர்கள் இந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து புகார் எழுப்பிய பிறகு, இந்த பிரச்சனையைச் சரிசெய்ய ஐசிஐசிஐ வங்கி, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் iMobile Pay செயலியில் கிரெடிட் கார்டு தகவல்களைக் காட்டுவதை வங்கி தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகச் சுமந்த மண்டல் அடுத்த டிவீட்டல் தெரிவித்தார்.
இந்த நிலையில் ஐசிஐசிஐ வங்கி செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து லைவ்மின்ட் பத்திரிக்கைக்கு விளக்கம் கொடுத்தார், இதில் "டிஜிட்டல் சேனல்களில் சுமார் 17,000 புதிய கிரெடிட் கார்டுகளின் தரவுகள் தவறாக இணைக்கப்பட்டதே இந்த பிழைக்குக் காரணம்" என்று கூறினார்.

மேலும், பாதிக்கப்பட்ட கார்டுகளில் வங்கியின் மொத்த கிரெடிட் கார்டு எண்ணிக்கையில் 0.1 சதவீதம் மட்டுமே உள்ளன என்றும், தவறாகப் பயன்படுத்தப்பட்டதற்கான எந்த புகார்களும் இதுவரை வரவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்த பாதுகாப்பு குறைபாடு கவலைக்குரிய விஷயம் என்றும், வங்கிகள் தங்கள் டிஜிட்டல் தளங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். நேற்று ஆர்பிஐ கோடக் மஹிந்திரா வங்கி மீது கடும் நடவடிக்கை எடுத்தது மறக்க முடியாது.


Click it and Unblock the Notifications