வீடியோகான் கடன் மோசடி வழக்கில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோருக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜனவரி 9ஆம் தேதி ஜாமீன் வழங்கியது.
சந்தா கோச்சார் மற்றும் தீபக் கோச்சார் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், சட்ட விரோதமான கைது எனக் கூறி அவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் அவர்களை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.
சந்தா கோச்சார் மற்றும் தீபக் கோச்சார் ஆகியோர் வீடியோகான் கடன் மோசடி வழக்கில் சட்டப்படி கைது செய்யப்படவில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
ஐசிஐசிஐ வங்கி
இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியாக இருக்கும் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவரும், உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஒரு காலத்தில் இடம்பெற்ற சந்தா கோச்சார் வீடியோகான் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு விதமுறை மீறி அதிகப்படியான கடன் கொடுத்தது.
சந்தா கோச்சார்
இந்தக் கடன் மோசடி மூலம் சந்தா கோச்சார் தனது கணவருக்கு NUPOWER நிறுவனத்தின் மொத்த உரிமையை வாங்கிக் கொடுப்பதற்காக வீடியோகான் நிறுவனத்தின் தலைவர் வேணுகோபால் தூத் உடன் இணைந்து வங்கிக் கடன் மோசடியைச் செய்தது வெளிச்சத்திற்கு வந்த நாளில் இருந்து இந்திய வங்கி துறையில் குறிப்பாக ஐசிஐசிஐ வங்கி முதலீட்டாளர்கள் பதற்றமான சூழ்நிலையிலேயே உள்ளனர் என்றால் மிகையில்லை.
வீடியோகான் - ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி
வீடியோகான் - ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி குறித்துச் சிபிஐ அமைப்பின் பல மாத ஆய்வுக்குப் பின்பு சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், வேணுகோபால் தூத் ஆகியோர் கடந்த மாதம் சிபிஐ கைது செய்து விசாரணை நடத்தியது.
சிபிஐ விசாரணை
இந்த விசாரணையின் அடுத்தகட்டமாக ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் வீடியோகான் குழும நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட 10க்கும் அதிகமாகக் கடன்கள் குறித்த விபரங்களைச் சேகரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக ஐசிஐசிஐ வங்கியிடம் தரவுகளைத் திரட்டி வருகிறது.
மும்பை உயர் நீதிமன்றம்
இந்த நிலையில் தான் சந்தா கோச்சார் மற்றும் தீபக் கோச்சார் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், தாங்கள் சட்ட விரோதமான கைது எனக் கூறி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் அவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஸ்போர்ட்
இதோடு மும்பை உயர் நீதிமன்றம் சந்தா கோச்சார் மற்றும் தீபக் கோச்சார் ஆகியோர் தங்களது பாஸ்போர்ட்டை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது. மேலும் சிபிஐ கைதுக்குப் பின்பு சந்தா கோச்சார் பைகுல்லா மாவட்ட சிறையிலும் (பெண்கள் சிறை) தீபக் கோச்சார் ஆர்தர் ரோடு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
3250 கோடி ரூபாய் கடன்
ஐசிஐசிஐ வங்கியின் தலைவராகச் சந்தா கோச்சார் இருந்த காலகட்டமான 2012ல் ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் வீடியோகான் குழுமத்திற்குச் சுமார் 3250 கோடி ரூபாய் அளவிலான கடனை அளித்துள்ளது. அவருடைய நிர்வாகத்திலேயே வீடியோகான் மற்றும் அதன் இணை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை வாராக் கடனாக அறிவிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
வீடியோகான் வேணுகோபால் தூத்
இந்தக் கடன் பெற்ற பின்பு வேணுகோபால் தூத், தீபக் கோச்சார் 50 சதவீத பங்குகளை வைத்திருந்த நியூபவர் ரினியூவபிள்ஸ் நிறுவனத்துக்குச் சுமார் 64 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்துள்ளதை சிபிஐ கண்டுபிடித்தது.
வழக்கு
வீடியோகான் - ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடியில் சந்தா கோச்சார் மற்றும் தீபக் கோச்சார் மட்டும் அல்லாமல் வீடியோகான் குரூப் தலைவர் வேணுகோபால் தூத், வீடியோகான் இன்டர்நேஷனல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், NuPower ரெனிவபிள்ஸ் பிரைவேட் லிமிடெட், சுப்ரீம் எனர்ஜி பிரைவேட் லிமிடெட், வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் மீது சிபிஐ இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications