கொரோனா வைரஸ் தான் இன்று எல்லா நாடுகளின் நடுநாயகப் பிரச்சனையாக இருக்கிறது.
எவனாக இருந்தாலும், அடித்து நொறுக்கும் அமெரிக்காவையே இன்று கொரோனா விட்டு விலாசிக் கொண்டு இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
அப்படி இருக்கும் போது இந்தியப் பொருளாதாரம் மட்டும் தப்பிக்க முடியுமா என்ன..? முடியாது எனச் சொல்லி இருக்கிறது ICRA நிறுவனம்.
ஆர்பிஐ அறிவிப்பு
நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுமாராக 1.70 லட்சம் கோடி ரூபாய்க்கு பல உதவித் திட்டங்களை அறிவித்தார். இன்று ஆர்பிஐ தன் ரெப்போ ரேட் , ரிவர்ஸ் ரேப்போ ரேட் வட்டி விகிதங்களை 0.75 % & 0.90 % குறைத்து இருக்கிறார்கள்.
ஜிடிபி சரிவு
இந்த கொரோனா பிரச்சனை வருவதற்கு முன்பே, ஏற்கனவே இந்தியப் பொருளாதாரத்தின் ஜிடிபி வளர்ச்சி, சுமாராக கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2019 - 20 நிதி ஆண்டில் வெறும் 5.0 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி காண வாய்ப்பு இருப்பதாக அரசின் அதிகாரபூர்வ தரவுகள் சொன்னது குறிப்பிடத்தக்கது.
4.5 % வீழ்ச்சி
இன்று ஆர்பிஐ அறிவித்து இருக்கும் வட்டி விகித குறைப்புகளுக்குப் பின் கூட, இந்தியாவின் பொருளாதார ஜிடிபி வளர்ச்சி ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரையான (2020 - 21 நிதி ஆண்டில் முதல் காலாண்டில்) காலத்தில் -4.5 சதவிகிதம் வளரலாம் எனச் சொல்லி இருக்கிறது ICRA. அதாவது 4.5 சதவிகிதம் ஜிடிபி வீழ்ச்சி காணலாம் என சொல்லி இருக்கிறார்கள்.
2020 - 21
அதே போல 2020 - 21 நிதி ஆண்டில், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 2 சதவிகிதமாக இருக்கலாம் எனவும் சொல்லி நமக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது ICRA நிறுவனம். இதற்கு எல்லாம் காரணம் ஒட்டு மொத்த உலகத்தையும் ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கும் கொரோனா தான் என்கிறது ICRA.
வரவேற்பு
இன்று மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்து இருக்கும் விஷயங்கள் எல்லாமே நிலை கொள்ளாத சந்தையை, ஓரளவுக்கு நிலைப்படுத்தும். அதோடு கடனை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்தாதவர்களை ஓரளவுக்கு பாதுகாக்கும். ஆனால் பொருளாதார வளர்ச்சி, பெரிய அளவில் இருக்காது எனச் சொல்லி இருக்கிறது ICRA.


Click it and Unblock the Notifications