உலகம் முழுவதும் பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், பெங்களூரை சேர்ந்த ஒரு நிறுவனம் முற்றிலும் மாறுபட்ட மற்றும் முன்னோடி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது பலரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.
பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உணவு தயாரிப்பு நிறுவனமான ஐடி ஃப்ரெஷ் ஃபுட் (iD Fresh Food) புதுமையான ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை தொழில்முனைவோராக மாற்ற ஊக்கவிக்கும் வகையில் ஒரு புதிய Entrepreneurship Policy-ஐ அறிவித்துள்ளது. ஐடி ஃப்ரெஷ் ஃபுட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் தலைவருமான பி.சி. முஸ்தஃபா LinkedIn வாயிலாக இந்த திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஊழியர்கள் தங்களது சொந்த தொழில் கனவுகளை எந்தவித அச்சமும் இல்லாமல் தொடர வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம் என அவர் கூறியுள்ளார். எனவே சொந்தமாக தொழில் தொடங்க விரும்பும் தகுதியான ஊழியர்களுக்கு மூன்று முக்கிய வடிவங்களில் உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சுய தொழில் தொடங்கும் காலத்தில் கடுமையான மற்றும் நிச்சயமற்ற காலகட்டத்தை ஊழியர்கள் சமாளிப்பதற்காக, சில மாதங்கள் வரை பகுதி சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும். இதன் மூலம் அவர்கள் முழு கவனத்தையும் தங்களது புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் செலுத்த முடியும் என கூறியுள்ளார்.
புதிய தொழிலுக்காக தலைமை நிர்வாக குழுவினரிடமிருந்து நேரடி வழிகாட்டுதலும் ஆலோசனைகளும் வழங்கப்படும். மேலும், நிறுவனத்தின் ஒட்டுமொத்த வணிக கட்டமைப்பு, கூட்டாளிகள் முதலீட்டாளர்கள் மற்றும் துறை சார்ந்த முக்கிய தொடர்புகள் ஆகியவற்றுக்கான வாய்ப்புகளும் ஏற்படுத்தி தரப்படும் என உறுதி அளித்துள்ளார்.
ஊழியர்கள் தாங்கள் தொடங்கும் புதிய தொழில் எதிர்பார்த்தபடி வெற்றிபெறாவிட்டாலோ அல்லது தொழில்முனைவோர் பயணம் தனக்கு பொருந்தவில்லை என நினைத்தாலோ, அவர்கள் தங்களது முடிவை மாற்றி கொண்டு மீண்டும் ஐடி ஃப்ரெஷ் ஃபுட் நிறுவனத்திற்கே திரும்பி வரலாம். இதனால் புதிய தொழில் தொடங்குவதற்கான நிதி இழப்பு மற்றும் வேலை இழப்பு பயம் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.
பெங்களூரில் உள்ள ஒரு சிறிய சமையலறையில், வெறும் 50,000 ரூபாய் ஆரம்ப முதலீட்டில் தொடங்கப்பட்டதுதான் ஐடி ஃப்ரெஷ் ஃபுட் நிறுவனம். அப்போது தான் சந்தித்த பிரச்சினைகளை புதிதாக தொழில் தொடங்கும் நபர்கள் சந்திக்க கூடாது என்பதற்காக இப்படி ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக பி.சி. முஸ்தஃபா கூறுகிறார்.
சிரமமான காலகட்டத்தில் தனக்கு கிடைத்த ஆதரவை இன்று தன் ஊழியர்களுக்கும் வழங்க விரும்புவதாக முஸ்தஃபா தெரிவித்துள்ளார். திறமையான ஊழியர்கள் நிறுவனத்தைவிட்டு வெளியேறுவது உணர்வுபூர்வமாக வருத்தமாக இருந்தாலும், அவர்கள் சொந்தமாக தொழில் தொடங்கி பெரிய அளவில் சாதிப்பதை பார்ப்பது பெருமிதம் அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
உலகளவில் பெரிய நிறுவனங்கள் செலவினங்களை குறைப்பதாக கூறி ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி வருகின்றன. மேலும் மைக்ரோசாஃப்ட் , கூகுள் போன்ற நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டங்களை அறிவித்துள்ளன. இத்தகைய சூழலில், ஐடி ஃப்ரெஷ் ஃபுட் நிறுவனத்தின் இந்த முன்னெடுப்பு கார்ப்பரேட் உலகில் ஒரு முன் உதாரணமாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications

