அந்தக்காலத்தில் எல்லாம் பட்டப்படிப்பு என்பது பெண்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது. பள்ளி உயர் கல்வியைத் தாண்டுவதே பெரிய பாடாக இருந்தது. அந்தளவுக்கு சமுகக் கட்டுப்பாடுகள் இருந்தன. இந்த நிலையில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்து கையோடு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் உயர்ந்த பதவியை வகித்து பெண்களுக்கு ஓர் உத்வேகமாக விளங்கியவர் சுதா.
சுதா என வெறுமென அழைத்தால் பவருக்கும் தெரியாது, சுதா மூர்த்தி என்றால் சட்டென அனைவரின் நினைவிற்கும் வருவார். இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா நாராயணமூர்த்தி, இன்போசிஸ் அறக்கட்டளையின் தலைவராக தற்போது உள்ளார்.

1960 களின் பிந்தைய காலகட்டத்தில் அவர் படித்த பல்கலைக்கழகத்தில் ஒரே மாணவியாகத் திகழ்ந்தார் சுதா. சயின்ஸ், டெக்னாலஜி, இன்ஜினியரிங், மேத்தமாடிக்ஸ் எனப்படும் ஸ்டெம் தொகுப்பின் மீது வைத்திருந்த மாறாப்பற்றின் காரணமாகத் ஆண்களின் ஆதிக்கத்திற்கு மத்தியில் தனது படிப்பை முடித்தார் சுதா.
படிப்பை முடித்து வேலைக்கு சென்ற இடத்தில் தான் முதல் முறையாக சுதா மூர்த்தி, நாராயணமூர்த்தியை சந்தித்தார். நாராயண மூர்த்தியை சுதா மூர்த்திக்கு அவரது கல்லூரி நண்பர் பிரசன்னா அறிமுகம் செய்து வைத்தார். விண்ணை எட்டும் கனவில் இருந்த நாராயண மூர்த்தியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் சுதா.
பாலின பாகுபாடு அதிகமாக இருந்த காலத்தில் தான் சந்தித்த முட்டுக்கட்டைகளையெல்லாம் உடைத்தெறிந்துவிட்டு தன்னந்தனியாக தனது வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்தவர் சுதா மூர்த்தி. இந்தியாவில் அப்போது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவுக்கு இருந்த ஐடி துறையில் தனது கணவர் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு பக்கபலமாக விளங்கினார்.
1981ஆம் ஆண்டின்போது இன்போசிஸ் நிறுவனத்தைத் தொடங்குவதற்கு நாராயண மூர்த்தி திட்டமிட்டிருந்தபோது அவசரத் தேவைக்காக முடிந்து வைத்திருந்த தனது சொந்த சேமிப்பில் இருந்து பத்தாயிரம் ரூபாயை எடுத்துத் தந்தார் சுதா.
அதன் பின் ஏற்பட்ட சாப்ட்வேர் புரட்சியில் நாராயண மூர்த்தியின் இன்போசிஸ் ஐடி துறையின் உச்சாணிக் கொம்பை சென்றடைந்தது. இந்தியாவில் சாப்ட்வேர் புரட்சியை ஏற்படுத்திய நாராயண மூர்த்திக்கு அவரது மனைவி தந்த அந்தப் பணம் நல்ல மூலதனமாக இருந்தது.
இதுபற்றி ஒரு தனியார் டிவிக்கு பேட்டி தந்த சுதா மூர்த்தி, இந்தியாவின் சிறந்த ஒரு முதலீட்டாளராக நான் மாறிவிட்டேன் போல. எனக்குத் தெரியவில்லை என்றார். தான் தந்த முதலீடு தனது கணவரின் கனவை நிறைவேற்றுவதற்கு அடித்தளமாக இருந்தது என்று ஒரு முறை குறிப்பிட்டார் சுதா மூர்த்தி.
இன்போசிஸ் நிறுவனத்தின் ஆரம்பகட்ட முதலீடாக சுதா மூர்த்தி கொடுத்த 10,000 ரூபாய் இன்றைக்கு பல்லாயிரம் கோடி ரூபாய்களாக பெருகியுள்ளது. இந்த 10000 ரூபாய் இல்லையெனில் இன்று இன்போசிஸ் இருந்திருக்காது, அன்றைக்கு நாராயணமூர்த்தியை நம்பி யாரும் பணம் கொடுக்கவில்லை என்பது தான் உண்மை.


Click it and Unblock the Notifications