மும்பை: ரேமண்ட் குழும தலைவராக இருக்கும் கௌதம் சிங்கானியாவுக்கு மனைவியுடனான விவாகரத்து பிரச்னை பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. கௌதம் சிங்கானியா ரேமண்ட் குழுமத்தின் தலைவராகவும் மேலாண் இயக்குனராகவும் செயல்பட்டு வருகிறார். விரைவில் ரேமண்ட் குழுமத்தின் வாரிய உறுப்பினர்கள் குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.
இம்மாத இறுதியில் நடைபெறும் கூட்டத்தில் மீண்டும் கௌதம் சிங்கானியாவே ரேமண்ட் குழுமத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால், மணி கண்ட்ரோல் தளம் வெளியிட்டுள்ள செய்தி அடிப்படையில் நிறுவன முதலீட்டாளர் ஆலோசனை சேவைகள் அமைப்பு ஆண்டு வாரிய உறுப்பினர்கள் கூட்டத்தில் கெளதம் சிங்கானியாவை மீண்டும் தலைவராக தேர்ந்தெடுப்பதற்கு எதிராக வாக்களிக்கும் படி பங்குதாரர்களை வலியுறுத்தியுள்ளது.
கௌதம் சிங்கானியா மற்றும் அவரது மனைவி நவாஸ் மோடி இடையிலான விவாகரத்து வழக்கில் இன்னும் தீர்வு எட்டப்படாமல் இருப்பது தான் இதற்கு முக்கிய காரணம். கௌதம் சிங்கானியா 1999 ஆம் ஆண்டு நவாஸ் மோடி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கௌதம் சிங்கானியா தங்களது குடும்பத் தொழிலான ஜேகே குரூப் ஆஃப் கம்பெனிஸில் 1986 ஆம் ஆண்டு நுழைந்தார். 1990 ஆம் ஆண்டு ரேமண்ட் குழுமத்தின் இயக்குனராக தன்னுடைய பணியை தொடங்கினார்.
அன்று முதல் தற்போது வரை அவர் இயக்குனராக செயல்பட்டு வரக்கூடிய நிலையில் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்டுள்ள மனக்கசப்பு தொழில் ரீதியாகவும் அவருக்கு பிரச்சனையை உருவாக்க தொடங்கியுள்ளத.
நிறுவன முதலீட்டாளர் ஆலோசனை சேவைகள் அமைப்பு,ரேமண்ட் வாரிய உறுப்பினர்கள் குழுவில் இருந்து சிங்கானியாவை நீக்குவதற்கு பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் தெளிவாக தெரிவிக்கின்றன.
தற்போது கௌதம் சிங்கானியாவிற்கும் அவரது மனைவி நவாஸ் மோடிக்கும் இடையே உள்ள விவாகரத்து பிரச்சினைகள் முடிந்து தீர்வு எட்டப்படும் வரை இருவரையுமே குழுவில் இருந்து நீக்குவது தான் நிறுவனத்திற்கு நன்மை அளிப்பதாக அமையும் என தெரிவித்துள்ளது.
நவாஸ் மோடி, கௌதம் சிங்கானியா மீது குடும்ப வன்முறை குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். கடந்த ஆண்டு குழுமத்தின் சில நிறுவனங்களில் இருந்து நவாஸ் மோடி நீக்கப்பட்டார். அதற்கு கௌதம் சிங்கானியாவின் சதி தான் காரணம் என அவர் குற்றம்சாட்டி இருந்தார்.
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்டுள்ள தனிப்பட்ட பிரச்சனையில் நிறுவனம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு பங்குதாரர்கள் , இருவரையும் வாரியத்தில் இருந்து நீக்குவது தான் சரியானதாக இருக்கும் என்பது நிறுவன முதலீட்டாளர் ஆலோசனை சேவைகள் அமைப்பின் பரிந்துரை. ஆனால் வாரிய உறுப்பினர்கள் என்ன முடிவினை எடுப்பார்கள் என்பது இந்த மாத இறுதியில் தெரிய வரும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications