சென்னை: இந்தியாவில் இளைஞர்களின் மேற்கல்விக்கும் வேலைவாய்ப்புகளுக்கும் பல்வேறு போட்டித் தேர்வுகள் உள்ளன. இதில், தாங்கள் விரும்பும் மேற்கல்வியைப் படிப்பதற்கான பல தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது மிகக் கடினமான காரியமாகும். பல மாதங்கள் அயராமல் படிக்க வேண்டும். இந்தத் தேர்வுகளில் மிக முக்கியமாகக் கருதப்படுவது ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஐஐடி-ஜேஇஇ தேர்வாகும்.
ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். ஆனால் அதில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் மாணவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர். இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கவிருப்பது மிக இளம் வயதிலேயே இந்தப் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரு சாதாரண குடும்பப் பின்னணியைக் கொண்ட அறிவாளிச் சிறுவனைப் பற்றியதாகும். அந்தச் சிறுவனின் சாதனை ஏகப்பட்ட இளைஞர்களுக்கு மிகப் பெரிய உத்வேகத்தை அளிக்கும் விதமாக உள்ளது.

பீகார் மாநிலத்தின் ஆரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண விவசாயியின் மகன் சத்யம்குமார். சத்யம்குமாரின் சாதனைப் பயணம் அவரது 13ஆவது வயதில் அவர் ஐஐடி நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றதில் இருந்து தொடங்குகிறது. இதில் அவரது தாத்தா ராம் லால் சிங் சத்யம் குமாருக்கு மிகவும் உறுதுணையாக இருந்துள்ளார்.
2012ஆம் ஆண்டில் தனது 12 ஆவது வயதில் ஐஐடி நுழைவுத் தேர்வில் அகில இந்திய அளவில் 8,137 ஆவது இடத்தைப் பிடித்தார். இருப்பினும் மனம் தளராமல் மீண்டும் முயற்சித்து தனது 13ஆவது வயதில் அகில இந்திய அளவில் 670 ஆவது இடத்தைப் பிடித்தார்.
இதன்மூலம் அவர் மிக இளவயது ஐஐடியனாக புகழ் பெற்றார். அதுமட்டுமல்லாமல் டெல்லியைச் சேர்ந்த சாஹல் கௌஷிக் தனது 14 வயதில் கடந்த இந்த சாதனையையும் சத்யம் குமார் முறியடித்தார்.
இதைத் தொடர்ந்து அவரது வீடு, நிலம் ஆகியவற்றை அடமானம் வைத்து கிடைத்த தொகையும், அவரது திறமைக்கு கிடைத்த ஸ்காலர்ஷிப்புகளும் படிப்புக்கு உதவியாக அமைந்தது. ஐஐடி கான்பூரில் தனது பிடெக், எம்டெக் படிப்பை முடித்த சத்யம் குமார் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள பிரெய்ன் கம்ப்யூட்டர் இன்டர்பேஸ் கல்வி நிலையத்தில் பிஹெச்டியை முடித்தார்.
இதைத் தொடர்ந்து ஆப்பிள், கூகுள், பேஸ்புக் போன்ற பெரிய நிறுவனங்களில் தனது இன்டர்ன்ஷிப்பை முடித்தார். ஆப்பிளில் அவர் மெஷின் லேர்னிங் இன்டர்னாக பயிற்சி பெற்றார். அவரது 24 வயதில் முதல் வேலை கிடைத்தது. சத்யம் குமாரின் லிங்க்டின் ஸ்டேட்டஸ் படி அவர் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் கிராஜுவேட் ரிசர்ச் அசிஸ்டென்டாக இப்போது உள்ளார்.
ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸ், மனித சமுதாயத்துக்கு ஒரு புரட்சிகரமான தொழில்நுட்பமாக சத்யம் குமார் நம்புகிறார். அதில் மிகப்பெரிய பிரகாசமான எதிர்காலமும் நன்மைகளும் இருக்கிறது என்கிறார். இந்திய கல்வி முறையை அவர் பாராட்டும் அதேசமயத்தில் அதை மேம்படுத்துவற்கு சில மாற்றங்களையும் முன் மொழிகிறார்.


Click it and Unblock the Notifications