வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி ஐஐடியில் கல்வி பயின்ற மாணவர்கள் அதிகபட்சமாக ஆண்டுக்கு 2.2 கோடி சம்பளத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு ஐஐடிகளில் படிப்பை முடித்த மாணவர்களுக்கு கூட வேலைவாய்ப்பு கிடைக்காமல் தவிக்கின்றனர் என ஒரு தகவல் வெளியானது. குறிப்பாக நடப்பாண்டில் ஐஐடியில் படிப்பை முடித்த மாணவர்கள் பலரும் கேம்பஸ் பிளேஸ்மெண்டில் கூட வேலை வாய்ப்பு கிடைக்காமல், தாங்கள் எதிர்பார்த்த ஊதியத்திற்கு வேலை கிடைக்காமல் தவித்து வருகின்றனர் என சொல்லப்பட்டது.

இந்த நிலையில் வாரணாசியில் செயல்பட்டு வரக்கூடிய ஐஐடியில் நடப்பு ஆண்டில் அதிகபட்சமாக மாணவர்கள் ஆண்டுக்கு 2.2 கோடி ரூபாய் சம்பளத்திற்கு வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இதற்கு முன்பு 2021 ஆம் ஆண்டில் இதே ஐஐடி வளாகத்தில் ஆண்டுக்கு 2.15 கோடி ரூபாய் சம்பளத்தில் மாணவர்கள் வேலைக்கு சென்றது சாதனையாக இருந்தது. தற்போது அது முறியடிக்கப்பட்டுள்ளது.
இது தவிர வாரணாசி ஐஐடியில் படிப்பை முடித்த மாணவர்களில் 1128 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் என்றும் 424 பேர் பெரிய நிறுவனங்களில் தொழில் பயிற்சி வாய்ப்பு பெற்றுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஐஐடியில் நடப்பாண்டில் வேலை வாய்ப்பு பெற்ற மாணவர்களின் ஆண்டு ஊதியம் சராசரியாக 22.80 லட்சம் ஆக இருக்கிறது.
தற்போது சர்வதேச அளவில் நிறுவனங்கள் எந்த திறன்களுடன் ஊழியர்களை எதிர்பார்க்கின்றனவோ அதற்கு நிகரான திறன்கள் கொண்ட மாணவர்களை வழங்கும் கல்வி நிறுவனமாக ஐஐடி வாரணாசி செயல்படுகிறது என அதன் இயக்குனர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தங்கள் மாணவர்களின் திறமை , கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற தங்கள் நிறுவனத்தின் அர்ப்பணிப்பு ஆகியவையே பெரிய பெரிய டெக் நிறுவனங்கள் தங்கள் கல்வி நிறுவனத்தில் இருந்து மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்ய காரணமாக இருக்கிறது என அவர் கூறியுள்ளார்.
கூகுள், மைக்ரோசாப்ட் , டாட்டா ஸ்டீல், அமேசான் , ஐடிசி, சாம்சங் , வால்மார்ட் உள்ளிட்ட 350 நிறுவனங்கள் நடப்பு ஆண்டில் வாரணாசி ஐஐடியில் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தி மாணவர்களை தேர்வு செய்துள்ளன. வேலை வாய்ப்பு பெற்ற மாணவர்களில் சுமார் 11 பேர் ஆண்டுக்கு 1கோடி ரூபாய்க்கும் அதிகமான சம்பளத்தில் வேலை பெற்று இருப்பது தெரியவந்துள்ளது.
வாரணாசி ஐஐடியில் 2021-22ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 2.15 கோடி ரூபாய் சம்பளத்திற்கு மாணவர்களுக்கு வேலை கிடைத்தது. இது 2022-23ஆம் ஆண்டில் 1.20 கோடி ரூபாய் என்றும் , 2023-24ஆம் ஆண்டில் 1.68 கோடி ரூபாய் என்றும் இருந்தது. தற்போது இது 2024-25ஆம் ஆண்டில் 2.20 கோடி ரூபாய் என்று உச்சத்தை தொட்டுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications