இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி, மெட்ராஸ்-இல் (IIT மெட்ராஸ்) கல்வி பயின்ற புகழ்பெற்ற முன்னாள் மாணவர் டாக்டர் கிருஷ்ணா சிவுகுலாவிடமிருந்து ரூ. 228 கோடி மிகப்பெரிய தனிநபர் நன்கொடையைப் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நன்கொடை இந்தியாவின் கல்வி நிறுவனங்களில் இதுவரை யாரும் வழங்காத மிகப்பெரிய நன்கொடைகளில் ஒன்றாக உள்ளது. பயின்ற கல்வி நிறுவனத்திற்கு மீண்டும் வந்து நன்கொடை வழங்குவது எவ்வளவு பெரிய விஷயம். இதைச் செய்துக் காட்டியுள்ளார் கிருஷ்ணா சிவுகுலா.
இந்த வரலாற்றுப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், ஐஐடி மெட்ராஸ் ஒரு கல்வித் கட்டடத்திற்கு "கிருஷ்ணா சிவுகுலா பிளாக்" என்று பெயரிட்டுள்ளது. பெயரிடும் விழா ஆகஸ்ட் 6, 2024 அன்று நடைபெற்றது, இதில் டாக்டர் கிருஷ்ணா சிவுகுலா, ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி காமகோடி, முன்னாள் மாணவர்களின் டீன் மற்றும் கார்ப்பரேட் ரிலேஷன்ஸ் பேராசிரியர் மகேஷ் பஞ்சகுனுலா மற்றும் பிற ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நன்கொடை பல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட உள்ளது. இதில் சர்வதேச மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குதல், சிறந்த ஆராய்ச்சிக்கு நிதி உதவி, இளங்கலை பொறியாளர்களுக்கு உதவித்தொகை திட்டம் ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும், கிருஷ்ணா சிவுகுளா ப்ளாக் பராமரிப்பு மற்றும் இதர நடவடிக்கைகளுக்கும் நிதி ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
யார் கிருஷ்ணா சிவுகுலா?: டாக்டர். கிருஷ்ணா சிவுகுலா ஐஐடி மெட்ராஸில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்கில் எம்டெக் பட்டம் பெற்று 1980-இல் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ பட்டம் பெற்றார்.
ஷிவா டெக்னாலஜிஸ் இன்க் மற்றும் இண்டோ எம்ஐஎம் பிரைவேட் லிமிடெட் ஆகிய இரண்டு உலக முன்னணி நிறுவனங்களை இவர் உருவாக்கியுள்ளார். மேலும் பொறியியல் உற்பத்தி தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்துள்ளார்.
1997-ஆம் ஆண்டில், அவர் அதிநவீன மெட்டல் இன்ஜெக்ஷன் மோல்டிங் (எம்ஐஎம்) தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தினார். அவரது நிறுவனம், INDO US MIM Tec, இப்போது MIM தொழில்நுட்பத்தில் திறன் மற்றும் விற்பனையில் உலகளவில் முன்னணியில் உள்ளது. இதன் வருவாய் சுமார் ரூ. 1,000 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிருஷ்ணா சிவுகுலாவின் நன்கொடைக்கு பேராசிரியர் வி. காமகோடி தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகும் எங்கள் முன்னாள் மாணவர் தனது கல்லூரியை நினைவில் கொண்டிருப்பது, கல்வி தான் மனிதனுக்கு வழங்கக்கூடிய ஒரே செல்வம் என்பதை நிரூபிக்கிறது என்று கூறியுள்ளார்.
ஐஐடி மெட்ராஸ் 2023 முதல் 2024-ஆம் நிதியாண்டில் ரூ.513 கோடியை வசூலித்துள்ளது, இது முந்தைய ஆண்டை விட 135% அதிகமாகும். முன்னாள் மாணவர்கள், தனிநபர் நன்கொடையாளர்கள், சிஎஸ்ஆர் மற்றும் நிறுவனங்களின் நிதியுதவிகள் மூலம் இந்த நிதி திரட்டப்பட்டது. முன்னாள் மாணவர்கள் மூலம் மட்டும் திரட்டப்பட்ட மொத்த தொகை ரூ. 367 கோடியாகும். இது முந்தைய ஆண்டை விட 282 % அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications