இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல், ஜூன் மாதங்களில் ஐஐடி நிறுவனங்களில் பயின்ற மாணவர் இத்தனை கோடி சம்பளத்திற்கு பணி வாய்ப்பு பெற்றார் என்ற செய்தியை தான் நாம் இத்தனை ஆண்டுகளாக கேள்விப்பட்டிருக்கிறோம் . ஆனால் முதன்முறையாக ஐஐடியில் கல்வி பயின்ற மாணவர்கள் குறைவான ஊதியத்தில் வேலைவாய்ப்பு பெறுவதாக செய்தி வந்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் ஐஐடி கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பை முடித்து வேலைக்கு சென்றவர்களின் ஆண்டு சம்பளம் 15 முதல் 16 லட்சம் ரூபாய்க்குள் இருப்பதாக டெல்லாய்ட் மற்றும் டீம் லீஸ் ஆகிய நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த முதல் 10 பொறியியல் கல்வி நிறுவனங்களில் நடப்பாண்டில் பட்டப்படிப்பை முடித்து வேலைக்கு சென்ற மாணவர்களிடம் இந்த இரு நிறுவனங்களும் ஆய்வினை நடத்தின. இந்த 10 கல்வி நிறுவனங்களில் 8 ஐஐடிக்கள் ஆகும்.
இதன் படி ஐஐடி நிறுவனங்களில் கல்வி பயின்றவர்களுக்கு தற்போது கிடைக்கக்கூடிய ஆண்டு ஊதியம் என்பது 16 லட்சம் ரூபாயாக இருக்கிறது என கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2023 ஆம் ஆண்டில் கல்வி பயின்றவர்கள் 18 முதல் 20 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு ஊதியத்தில் வேலை பெற்ற நிலையில் தற்போது 15 இல் இருந்து 16 லட்சம் ரூபாயாக குறைந்துள்ளது. இது மட்டும் இன்றி பல்வேறு ஐஐடிகளில் கல்வி பயின்ற மாணவர்கள் இன்னும் வேலை வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றனர் என்ற ஒரு தகவலும் அண்மையில் ஆர்டிஐ மூலம் வெளியானது.
இந்தியாவில் உள்ள குறிப்பிடத்தக்க ஏழு ஐஐடி நிறுவனங்களில் படித்த மாணவர்களின் ஊதியம் தான் குறைந்து இருக்கிறது என டீம் லீஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ரமேஷ் அல்லூரி ரெட்டி தெரிவித்துள்ளார்.
அதேபோல புதிதாக நிறுவப்பட்ட ஐஐடி நிறுவனங்களில் பயின்றவர்களின் ஊதியம் என்பது 12இல் இருந்து 14 லட்சம் ரூபாயாக குறைந்து இருக்கிறதாம். மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பணியில் அமர்த்தப்படுவதும் குறைந்திருப்பதாக இந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
சர்வதேச அளவிலான பொருளாதார மந்தம் மற்றும் பல்வேறு துறைகளிலும் ஊழியர்களை பணிக்கு அமர்த்துவதில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவையே இதற்கு காரணம் என அவர் கூறுகிறார். மேலும் பெரும்பாலானவர்கள் 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவான ஊதியத்தில் தான் வேலை வாய்ப்பு பெறுகின்றனர் என்ற ஒரு தகவலையும் அவர் கூறுகிறார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications