இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் இரண்டு முக்கியமான மாநிலங்களாக தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகியவை இருக்கின்றன என சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனர் கீதா கோபிநாத் கூறியுள்ளார். இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருக்கும் கீதா கோபிநாத் இந்த கருத்தினை முன் வைத்தார்.
வர்த்தக சூழல், வணிகம் செய்வதை எளிதாக்குவது ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய இரு மாநிலங்கலும் உயர் தர வரிசையில் இருப்பதே வெளிநாடு முதலீடுகளை ஈர்க்க காரணம் என கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார். இதுபோன்ற நடைமுறைகளை நாடு தழுவியை அளவில் ஏற்படுத்தி முறைப்படுத்த வேண்டும் என கீதா கோபிநாத் தனது பேட்டியில் சுட்டிக்காட்டி உள்ளார். இந்தியாவிற்கான குறுகிய கால மற்றும் நீண்ட கால இலக்குகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் தற்போது தொழிலாளர் சீர்திருத்தங்களை மேற்கொள்வது மிகவும் அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தியா புதிய தொழிலாளர் சட்டங்களை கொண்டுள்ளது அவற்றை நடைமுறைப்படுத்துதல் என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறை , இதற்கு மத்திய அளவில் ஒருசெயல்முறை தேவைப்படுகிறது என்றார். தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துவதற்கு மாநிலங்களை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
பொது மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பில் முதலீடு செய்ய வேண்டியது அவசியம் என தெரிவித்த அவர், இந்தியா இந்த துறையில் பல பணிகளை மேற்கொண்டிருந்தாலும் இன்னும் சில பணிகளை மேற்கொண்டால்தான் அது முழுமை பெறும் என கூறியுள்ளார். மேலும் வர்த்தக கட்டுப்பாடுகள் என்பது இந்தியாவை சர்வதேச விநியோக சங்கிலியில் நுழைய விடாமல் தடுக்கிறது என தெரிவித்தார்.
அதாவது வர்த்தக ரீதியாக இந்தியா சிறந்த நாடாக மாற வேண்டும் ன கூறினார். அதாவது சர்வதேச வர்த்தகத்திற்கு சாதகமான கொள்கைகளை கொண்ட நாடாக இந்தியா இருக்கும்போது உலகளாவிய விநியோக சங்கிலியில் எளிதாக இந்தியா நுழைய முடியும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார். நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது கல்வி, திறன் மேம்பாடு ,நில சீர்திருத்தம் மற்றும் வேளாண் துறை சீர்திருத்தங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இந்தியாவில் தற்போது அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் இருக்கிறார்கள் ஆனால் அவர்களிடம் தற்போதைய வேலைகளுக்கு தேவையான திறமைகள் குறைவாக இருக்கிறது. அதனை மாற்றும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பல்வேறு காரணிகளால் உந்தப்பட்டு எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது என கீதா கோபிநாத் தெரிவித்திருந்தார். இந்தியாவின் கிராமப்புறங்களிலும் நுகர்வு நிலைகள் மறுமலர்ச்சி பெற்றுள்ளன, இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு நல்ல அறிகுறி ஆகும் என அவர் கூறியிருந்தார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications