பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியமான ஐஎம்எஃப் புதிதாக ஒரு நிபந்தனையை விதித்துள்ளது. இதன் மூலம் சீனா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவில் சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
பாகிஸ்தான் தன்னுடைய பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக ஒரு புறம் சர்வதேச அமைப்புகளிடமிருந்து கடன் பெறுவது, மறுபுறம் முதலீடுகளை ஈர்ப்பது என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடைய பாகிஸ்தான் முதலீடு செய்யும் நாடுகளுக்கு வரி சலுகை உள்ளிட்ட சிறப்பு உதவிகளை வழங்க கூடாது என தெரிவித்துள்ளது.

அதாவது சிறப்பு ஒப்பந்தங்கள் மூலம் குறிப்பிட்ட நாடுகளுக்கு சலுகையுடன் தொழில் பூங்காக்களை அமைத்து தர கூடாது என கூறியுள்ளது. சீனா இந்த நடைமுறையை கொண்டு தான் பாகிஸ்தானில் பெருமளவில் முதலீடு செய்து வருகிறது. தற்போது ஐஎம்எஃப் இப்படி ஒரு நிபந்தனையை விதித்திருப்பது பாகிஸ்தானுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10ஆம் தேதியிட்டு சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் ஏற்கனவே உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மற்றும் புதிதாக அமைக்கப்படும்.
பொருளாதார மண்டலங்களில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு வரி சலுகைகளை வழங்குவது, மானியங்களை வழங்குவது உள்ளிட்டவற்றை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளது. இதன் மூலம் அனைத்து நாடுகளும் முதலீடு செய்வதற்கு ஒரு சமமான வாய்ப்பு உருவாகும் என ஐஎம்எஃப் தெரிவிக்கிறது.
அண்மையில் தான் பாகிஸ்தான் பிரதமர் சீன நிறுவனங்களை பாகிஸ்தானில் ஆலைகளை நிறுவி முதலீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். ஏற்கனவே சீனா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பொருளாதார வழித்தட திட்டத்தின் கீழ் 9 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் கட்டமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த பணிகள் அனைத்தும் தற்போது பல்வேறு நிலைகளில் இருக்கின்றன. இந்த நிலையில் தான் ஐஎம்எஃப் இப்படி ஒரு நிபந்தனையை பாகிஸ்தானுக்கு வழங்கி உள்ளது.
பாகிஸ்தானுக்கான ஐஎம்எஃப் திட்டத்தின் தலைவரான நாதம் போர்ட்டர் அனைத்து நாடுகளும் எளிமையாக வந்து தொழில் தொடங்கும் வகையில் ஒரு சூழலை பாகிஸ்தான் உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் சலுகைகளை தருவதை நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். அண்மையில் தான் பாகிஸ்தான் ஐஎம்எஃப் இடம் இருந்து 7 பில்லியன் டாலர் அளவிலான கடனை பெற்றுள்ளது. இது ஒரு புறம் இருக்க மறுபுறம் சுமார் 100 சீன நிறுவனங்களை தங்களது தொழில் பூங்காக்களில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளது.
Written by: Devika


Click it and Unblock the Notifications