இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், உலகின் இரண்டாவது மற்றும் ஐந்தாவது பெரிய பொருளாதாரங்களுக்கு இடையே வர்த்தகம் என்ன ஆகுமோ என்ற கவலையும் எழுந்துள்ளது.
சீனாவால் இந்திய வீரர்கள் பலியாகியுள்ள நிலையில் இந்திய தரப்பானது சீனா பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது எனலாம்.
இந்திய சீன எல்லை பதற்றத்தால், உணர்ச்சிவசப்படும் இந்திய பொதுமக்கள் சீனாவில் தயாரிக்கப்பட்ட, தங்கள் வீடுகளில் உள்ள சீன பொருட்களை உடைத்து தங்கள் வெறுப்புகளை காண்பித்ததனை சில தினங்களுக்கு முன்பு காண முடிந்தது.

300 பொருட்களுக்கு வரி
இதனால் இந்தியா சீனா இடையிலான இடைவெளியானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது எனலாம். இதற்கு சிறந்த உதாரணம் தான் 300 இறக்குமதி பொருட்களின் பட்டியலை தயாரித்துள்ள இந்திய அரசு, அவற்றுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி சில தினங்களுக்கு முன்பு கூறியது. இந்த பட்டியலில் சீனா பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும், சீன இறக்குமதியை இந்தியா சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

சீனா இந்தியா கவர்ச்சிகரமான சந்தை
சீனாவும் இந்தியாவும் மிகப் பெரிய சந்தைகள் என்பதோடு, இரு நாடுகளும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கும் பிரம்மாண்டமான மற்றும் கவர்ச்சிகரமான சந்தையாகும். உலகின் மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான நிறுவனங்கள் கூட பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே சீனாவில் தொழிற்சாலைகளை அமைத்து, பொருட்களை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டு வருகின்றன.

வர்த்தக வளர்ச்சி
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகத்தின் வளர்ச்சி ஊக்கமளிப்பதாக இருக்கிறது. ஏனெனில் 3.6 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் இருந்த 2001 -ம் ஆண்டின் இந்திய-சீன வர்த்தகமானது, 2019-ம் ஆண்டில், சுமார் 90 பில்லியன் டாலர்களை எட்டியது. ஆக இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக சீனா உள்ளது.

மிகப்பெரிய மருந்து ஏற்றுமதி நாடு
இந்த உறவு ஒரு வழிப்பாதை அல்ல. இன்று இந்தியா உலகின் மிகப்பெரிய மருந்துகளை ஏற்றுமதி செய்யும் நாடாக இருந்தாலும், அதில் சீனாவின் பங்களிப்பும் அடங்கியிருக்கிறது, ஏனெனில் பெரும்பாலான மருந்துகளுக்கான மூலப்பொருள் சீனாவிலிருந்தே வர வழைக்கப்படுகின்றன.

வரியை அதிகரிக்க ஆய்வு
இந்த இரு நாடுகளும் வர்த்தகத்தில் மட்டும் அல்ல, முதலீட்டிலும் அப்படி அப்படித்தான். ஆக இப்படியாக இதுவரையில் வெளிப்படையாக வரியை அதிகரிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், இன்று பிசினஸ் டுடேவில் வெளியான செய்தி ஒன்றில், மருந்து தயாரிப்புக்கு தேவையான மூலதன பொருட்கள் தவிர்த்து அனைத்து சீன இறக்குமதிகளுக்கும் வரியை உயர்த்துவதற்கான சாத்தியத்தினை அரசு ஆராய்ந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

கருத்து கேட்டு மெயில்
கடந்த வாரத்தில் இது குறித்தான கருத்துகளை கேட்க, வர்த்தகம் மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஏராளமான பொருட்கள் குறித்து கருத்துக்களைக் கோரி, சிஐஐ, எம்ஐசிசிஐ மற்றும் அசோசெம் போன்ற தொழில் துறை அமைப்புகளுக்கு மெயில் அனுப்பப்பட்டது. கடந்த 2019 - 2020ம் ஆண்டில் 474 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இந்தியா சீனாவில் இருந்து இறக்குமதி செதுள்ளது, இது இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 8 சதவீதம் வீழ்ச்சியாகும்.

சீனா இந்தியாவில் இருந்து இறக்குமதி
இதே சீனா இந்தியாவில் இருந்து 65.26 பில்லியன் டாலர் மதிப்பிலான இறக்குமதியை செய்துள்ளது. இதே அமெரிக்கா 35.66 பில்லியன் டாலர் மதிப்பிலும், இதே ஐக்கிய அரபு அமீரகம் 30.25 பில்லியன் டாலர் மதிப்பிலும் இறக்குமதி செய்துள்ளன. இவ்வாறு சீனாவிலிருந்து இறக்குமதி செய்துள்ள பொருட்களில் அதிகம் மின்சார இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் தான். மொத்தம் 19.1 பில்லியன் டாலர் ஆகும்.

என்ன பொருட்கள் எவ்வளவு இறக்குமதி?
இதையடுத்து அணு உலைகள், கொதிகலன்கள், இயந்திரங்கள், மற்றும் இயந்திர பாகங்கள் 13.32 பில்லியன் டாலர் மதிப்பிலும், இதே கரிம வேதி பொருட்கள் 7.9 பில்லியன் டாலர் மதிப்பிலும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதே பிளாஸ்டிக் பொருட்கள் இறக்குமதியானது 2.7 பில்லியன் டாலர் மதிப்பிலும், உரங்கள் 1.8 பில்லியன் டாலர் மதிப்பிலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

மருந்து பொருட்கள் இறக்குமதி
சீனாவிலிருந்து மருந்து சம்பந்தமான இறக்குமதிகள் கடந்த நிதியாண்டில் வெறும் 166.2 மில்லியன் டாலர் தான. ஆனாலும் இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 12 சதவீத வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது. கடந்த நிதியாண்டில் வளர்ச்சியில் பதிவு செய்த பொருட்களில் இதுவும் ஒன்றாகும்.

மருத்துவ மூலப்பொருட்கள்
உலக அளவில் மருந்து தொழிலில் மூன்றாவது இடம் வகிக்கும் இந்தியா, அதன் மூலப்பொருட்களுக்கு அதிகம் சார்ந்துள்ளது சீனாவினைத் தான். மொத்தம் இறக்குமதியில் மூன்றில் இரண்டு மடங்கு சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றது. அதிலும் ஆண்டிபயாடிக்காக பயன்படுத்தப்படும் மருந்துகள் 90 சதவீதம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

சீனாவை நம்பியுள்ள இந்தியா
சோலார் பேனல்கள், மின் உதிரி பாகங்கள், அயல் லித்தியம் பேட்டரிகளில் இந்தியா சீனாவை அதிகம் நம்பியுள்ளது. ஆக இப்படியாக இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகளுக்கு மத்தியில், கடந்த சில மாதங்களாகவே உறவுகள் மோசமடைந்துள்ளன. சீனா இந்திய எல்லையில் நிலவிய பதற்றம் காரணமாக தற்போது, சீன பொருட்கள் வேண்டாம் என்ற புறக்கணிப்புகள் அதிகரித்து வருகின்றன.

இறக்குமதி செய்ய மாட்டோம்
கடந்த சில தினங்களுக்கு முன்பு அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டம், அத்தியாவசியமற்ற 3000 சீன பொருட்களை இறக்குமதி செய்ய மாட்டோம். விற்பனை செய்ய மாட்டோம் என்றும் கூறியுள்ளது. டிசம்பர் 2021க்குள் ஒட்டுமொத்த இறக்குமதியை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.