பெங்களூரு: இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகரம், இந்தியாவின் சிலிக்கன் வேலி என புகழ்பெற்றது பெங்களூரு நகரம். நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் வேலை வாய்ப்புக்காகவும் தொழில் தொடங்குவதற்காகவும் பெங்களூரு நகரை நோக்கி படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர். இதனால் பெங்களூருவில் வீட்டு வாடகை மதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது.
பெங்களூரில் நன்றாக வருமானம் ஈட்ட வேண்டும் என்றால் ஒருவர் ஐடி வேலைக்கு செல்ல வேண்டிய தேவையில்லை சொந்தமாக ஒரு வீடு வைத்திருந்தாலே போதும் எனக் கூறும் அளவுக்கு அங்கே வீட்டு வாடகைகளின் மதிப்பு உச்சத்தை எட்டியுள்ளதாம். கிரேப் வைன் என்ற தளத்தில் ஒரு பயனர் பெங்களூருவில் உங்களுடைய பகுதியில் நீங்கள் எவ்வளவு வீட்டு வாடகை செலுத்துகிறீர்கள் என கேள்வி எழுப்பி இருந்தார் . அதற்கு ஒரு பயனர் மூன்று படுக்கையறை கொண்ட தன்னுடைய வீட்டிற்கு தான் 78 ஆயிரம் ரூபாய் மாத வாடகையாக செலுத்துகிறேன் எனக் கூறியிருந்தார்.

அதற்கு ஒரு பயனர் மாதம் 78 ஆயிரம் ரூபாய் வாடகை மட்டுமே செலுத்துகிறீர்களா என ஆச்சரியத்துடன் கேட்டிருந்தார் . சில பயனர்கள் பெங்களூருவில் வேலைக்கு செல்வதற்கு பதிலாக சொந்தமாக ஒரு வீடு வாங்கி வாடகைக்கு விட்டாலே போதும் நமக்கு போதிய வருமானம் கிடைத்த விடும் என கிண்டலாக பதிவு செய்துள்ளனர். இந்தியாவிலேயே வீட்டு வாடகைகளின் மதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நகரமாக பெங்களூரு இருந்து வருகிறது. இதனால் மலிவு விலையில் வாடகைக்கு வீடு கிடைப்பது என்பது அங்கே கடினமாகிவிட்டதாக இளைஞர்கள் புலம்புகின்றனர்.
குடும்பமாக சென்று கணவன் மனைவி இருவரும் வேலை பார்க்கிறார்கள் எனும் போது கணிசமான தொகையை வீட்டு வாடகையாக செலுத்தலாம். ஆனால் புதிதாக வேலைக்கு சேர்ந்திருப்பவர்கள் , இளைஞர்களாக இருப்பவர்கள் அதிகபட்ச வாடகைக்கு மட்டுமே வீடுகள் கிடைப்பதால் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். பெங்களூருவில் அதிகமான நிறுவனங்கள் செயல்பட்டு வரக்கூடிய ஒயிட்ஃபீல்டு பகுதியில் 3 படுக்கையறை கொண்ட வீடுகளின் வாடகை குறைந்தபட்சம் 70 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் இருக்கிறதாம்.
வீட்டில் கிடைக்கும் கூடுதல் வசதிகளை பொறுத்து வாடகை மதிப்பு சற்றே ஏற்றம் இறக்கம் காணும் என சொல்லப்படுகிறது. வீட்டு வாடகை மட்டும் இன்றி இவ்வாறு வாடகைக்கு செல்லும்போது உரிமையாளர்கள் கேட்கும் டெபாசிட் தொகையும் பல லட்சங்களில் இருக்கிறதாம். ஒரு பயனர் தான் 40000 ரூபாய் வாடகை வீட்டுக்கு செல்கிறேன், அதற்கு 5 லட்சம் ரூபாயை டெபாசிட் தொகையாக கேட்கின்றனர் என தன்னுடைய கவலையை பதிவு செய்திருந்தார்.
Written by: Devika


Click it and Unblock the Notifications