டெல்லி: இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டு துறையை ஒழுங்குபடுத்தும் வகையில் மத்திய அரசு ஆன்லைன் விளையாட்டு விளம்பரம் மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025ஐ நிறைவேற்றி இருக்கிறது.பல தரப்பு எதிர்ப்பையும் மீறி அரசு இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது.
ரியல் மணி கேம்கள்: இந்த மசோதாவின் படி பணத்தை பந்தயமாக வைத்து விளையாடப்படும் அனைத்து வகையான ஆன்லைன் விளையாட்டுகளும் தடை செய்யப்படுகின்றன. பணத்தை பந்தயமாக வைத்து விளையாடப்படும் விளையாட்டுகள் தொடர்பான விளம்பரங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. ரியல் மணி கேம் எனப்படும் ஆன்லைன் விளையாட்டுகளில் இளைஞர்கள் பலரும் தங்களுடைய பணத்தை கட்டி விளையாடுகிறார்கள், ஆனால் இதில் பெரும்பாலானவர்களுக்கு எந்த வெற்றியும் கிடைப்பதில்லை.

தற்கொலை வரை செல்கின்றனர்: அடுத்தடுத்து தங்களிடம் இருக்கும் பணத்தை ஆன்லைன் விளையாட்டுகளில் கைவிட்டு கடன் வாங்கி கூட இந்த விளையாட்டுகளில் பங்கேற்கும் நபர்கள் இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் கடன் சுமையும் அதிகமாகி விளையாட்டில் போட்ட பணத்தையும் திரும்ப எடுக்க முடியாமல் தற்கொலைகள் வரை செல்ல நேரிடுகிறது. இந்த சூழலில் தான் மத்திய அரசு பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த மசோதாவை நிறைவேற்றி இருக்கிறது.
ரூ.20,000 கோடியை இழந்த இந்தியர்கள்: இந்தியாவை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் 45 கோடி பேர் ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழக்கிறார்கள் என்கிறது அரசு வெளியிட்டிருக்கும் தரவு. ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்கள் ஆன்லைன் விளையாட்டுகளில் இழக்கும் பணத்தின் மொத்த மதிப்பு 20 ஆயிரம் கோடி ரூபாய். அதாவது ஒவ்வொரு நிமிடத்திற்கும் 3.8 லட்சம் ரூபாயை இந்தியர்கள் இழக்கின்றனர்.
ரியல் மணி கேம்களுக்கு தடை: ஆன்லைனில் பணத்தை பந்தயமாக வைத்து விளையாடும் விளையாட்டுகள் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் துறை., அரசுக்கு நல்ல வரி வருவாய் வழங்கும் துறையாக இருந்தாலும் இந்த சமூகத்திற்கு இது நல்லதல்ல என்ற விஷயத்தை கருத்தில் கொண்டு தான் வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் சரி என அரசு இவற்றுக்கு தடை விதித்திருக்கிறது. அரசின் இந்த மசோதாவை பொறுத்தவரை ரியல் மணி கேம் எனப்படும் பணத்தை பந்தயமாக வைக்கும் விளையாட்டுகளுக்கு தான் தடை விதித்துள்ளது.
என்ன தண்டனை: இ -ஸ்போர்ட்ஸ், ஆன்லைன் சோசியல் கேமிங் ஆகிய இரண்டு துறைகளுக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. இந்த இரண்டுமே ஒழுங்குமுறைப்படுத்தப்படும் என அரசு தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் இந்த தடையை மீறி ஆன்லைனில் பணத்தை பந்தயமாக வைத்து விளையாடும் விளையாட்டுகளை வழங்குபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை, 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டுமே கூட விதிக்கப்படலாம். மேலும் இது தொடர்பான விளம்பரங்களை வெளியிடுபவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் அபராதம் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications