மும்பை: இந்தியாவிலேயே காஸ்ட்லி நகரமாக மும்பை இருக்கிறது என்பதற்கு சான்றாக ஒரு பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக மும்பையில் வாடகை வீடுகளின் நிலவரத்தை இது வெளிச்சம் போட்டு காட்டுகிறது. உட்கர்ஸ் குப்தா என்ற எக்ஸ் தள பயனர் ஒருவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "ஒரு ஆடம்பரமான இரண்டு படுக்கை அறை கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், கழிவறைக்கு மேலே வாஷிங் மெஷின் பொருத்தப்பட்டுள்ளது " என கூறியுள்ளார். அதற்கான படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். அதில் கழிவறையில் கழிவறைக்கு மேலேயே வாஷிங் மெசின் சுவரில் பொருத்தப்பட்டிருக்கிறது தெரிய வருகிறது.
பல்லி ஹில் பகுதியில் இந்த குடியிருப்பு அமைந்துள்ளதாக தெரிகிறது. உட்கர்ஸ் குப்தாவின் இந்த எக்ஸ் தள பதிவு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. இது போன்ற ஒரு வடிவமைப்பு முறை சமூக வலைதளங்களில் பலராலும் கிண்டலுக்கும் கேளிக்கும் ஆளாகியுள்ளது. அதே வேளையில் இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு மாதத்திற்கு 1.35 லட்சம் வாடகையாக செலுத்தப்படுகிறதாம், 4 லட்சம் ரூபாய் செக்யூரிட்டி டெபாசிட்டாக செலுத்தியிருக்கிறார்களாம். இவ்வளவு தொகை செலுத்தியும் இப்படி ஒரு வீடு தான் மும்பையில் கிடைக்கிறது என அந்த பயனர் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது. பல்வேறு பயனாளர்களும் மும்பையில் ரியல் எஸ்டேட் நிலவரம் குறிப்பாக வாடகை வீடுகளின் நிலவரம் குறித்து பதிவிட்டு வருகின்றனர். ஒரு பயனர் மும்பையில் வாடகைக்கு வீடு தேடுபவர்களின் நிலைமை இதுதான் என தெரிவித்துள்ளார். ஒரு பயனர் கழிவறையை பயன்படுத்திக் கொண்டே செய்தித்தாள்களை படிப்பவர்களுக்கு இந்த செட்டப் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சாய்ந்து கொண்டே படிக்கலாம் என பதிவிட்டுள்ளார்.
சிலர் இது அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கட்டமைப்பின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கூறுகின்றனர் . சிலரோ தண்ணீரை மிச்சப்படுத்தும் நோக்கில் இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கலாம் என கூறுகின்றனர். அதாவது வாஷிங் மெஷினில் இருந்து வெளியாகும் தண்ணீரை கழிவறையில் ஃபிளஷ் செய்வதற்கு பயன்படுத்தப்படும் நோக்கில் கூட இப்படி செய்திருக்கலாம் என கூறியுள்ளனர்.
இருந்தாலும் இது ஒரு புதுமையான அமைப்பாக இருப்பது தான் பலரது கவனத்தையும் ஈர்க்க காரணமாக உள்ளது. அதே வேளையில் பெரு நகரங்களில் வீடுகளின் வாடகை பல மடங்கு உயர்ந்திருப்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது.
Written by: Devika


Click it and Unblock the Notifications