இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சியில் தாராளமயமாக்கல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை. தாராளமயமாக்கலுக்குப் பின்பு இந்தியாவின் 20 சதவீத ஏழை மக்களின் வருமானம் 1995ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து அதிகரித்து வருவதன் மூலம் நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
ஆனால் கடந்த 5 ஆண்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது, குறிப்பாக இந்தியாவின் ஏழை மக்கள் மற்றும் பணக்காரர்கள் மத்தியிலான வித்தியாசம் மிகப்பெரிய அளவில் பதிவாகியுள்ளது என மும்பை அமைப்பின் சர்வே கூறுகிறது.
20 சதவீத ஏழை மக்கள்
இந்தியாவின் 20 சதவீத ஏழை மக்களின் வருமானம் தாராளமயமாக்கல்-க்கு பின்பு 1995 முதல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்று பாதித்த 2020-21ஆம் ஆண்டில், 2015-16 ஆண்டுக் காலத்தை ஒப்பிடுகையில் சுமார் 53 சதவீதம் சரிந்துள்ளது. இதே காலகட்டத்தில் 20 சதவீத பணக்காரர்களின் குடும்ப வருமானம் 39 சதவீதம் அதிகரித்துள்ளது.
ICE360 சர்வே 2021
மும்பையைச் சேர்ந்த திங்க் டேங்க் அமைப்பான PRICE-ன் சமீபத்திய ICE360 சர்வே 2021ல் இந்த K வடிவிலான மாற்றம் கண்டறியப்பட்டு உள்ளது. 2021ஆம் ஆண்டின் ஏப்ரல் மற்றும் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் 100 மாவட்டங்கள், 800 கிராமங்கள், 120 டவுன்களில் சுமார் 2,42,000 குடும்பங்கள் மத்தியில் இந்த ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.
5 பிரிவுகள்
இந்த ஆய்வில் பொருளாதார அடிப்படையில் இந்த மக்களை 5 பிரிவுகளாகப் பிரித்துள்ளது இந்த அமைப்பு. இதன் படி முதல் பிரிவான 20 சதவீத ஏழை மக்களின் வருமானம் 2015-16 முதல் 2020-21 மத்தியிலான 5 வருடத்தில் 52.6 சதவீதம் சரிந்துள்ளது.
பணக்காரர்கள்
இதேபோல் 20 சதவீதம் லோவர் மிடில் கிளாஸ் பிரிவு மக்களின் வருமானம் 32.4 சதவீதம் சரிந்துள்ளது. 20 சதவீதம் மிடில் கிளாஸ் பிரிவு மக்களின் வருமானம் 8.9 சதவீதம் சரிந்துள்ளது. 20 சதவீதம் அப்பர் மிடில் கிளாஸ் பிரிவு மக்களின் வருமானம் 7.0 சதவீதம் அதிகரித்துள்ளது. 20 சதவீதம் பணக்காரர்களின் வருமானம் 39.0 சதவீதம் அதிகரித்துள்ளது என ICE360 சர்வே 2021 கூறுகிறது.
6 மாத முடக்கம்
2020-21ஆம் நிதியாண்டில் தான் கொரோனா தொற்றுக் காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டுப் பொருளாதாரம் மற்றும் வர்த்தக நடவடிக்கை 6 மாதம் மொத்தமாக நின்று போனது. இதன் மூலம் 2020-21ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் -7.3 சதவீதமாகச் சரிந்தது.
ஏழை மக்கள் நிலை
இக்காலகட்டத்தில் ஏழை மக்கள் குறிப்பாகப் பெரு நகரங்களில் இருக்கும் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு வேலைவாய்ப்பு, வருமானம் ஆகிய அனைத்தும் பாதிக்கப்பட்டது. இதன் வாயிலாகவே நாட்டின் கீழ் தட்டத்தில் இருக்கும் 20 சதவீத மக்களின் வருமானம் 52.6 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்
இந்தக் கொரோனா தொற்றுக் காலத்தில் போதுமான நிதி ஆதாரங்கள் மற்றும் பணப் புழக்கம் இல்லாத காரணத்தால் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டும், மூடப்படும் நிலையும் உருவானது. இதனால் மொத்த வர்த்தகச் சந்தையும் பெரும் நிறுவனங்களை மட்டுமே நம்பியிருக்கும் நிலை உருவானது.
பணக்காரர்கள் மற்றும் பெரு நிறுவனங்கள்
இதேவேளையில் முதலீட்டு சந்தையிலும் 2022-21ல் பெரிய அளவில் லாபம் கொடுத்த காரணத்தால் பணக்காரர்கள் அதிகளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளனர். ஏழை மற்றும் பணக்காரர்கள் மத்தியிலான இத்தகைய மாற்றம் இந்தியாவில் மட்டும் அல்ல உலக நாடுகள் முழுவதும் ஏற்பட்டு உள்ளது, ஆனால் இந்தியாவில் ஏழை மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


Click it and Unblock the Notifications