மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து புதிய வருமான வரி சட்டம் நடைமுறைக்கு வரும் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் புதிய வருமான வரி சட்டம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கக்கூடிய பழைய வருமான வரி சட்டத்திற்கு மாற்றாக புதிய வருமான வரி சட்டம் 2025 கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்து விட்டார். இந்த நிலையில் புதிய வருமான வரி சட்டம் ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது என அறிவித்திருக்கிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

1961ஆம் ஆண்டு இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட வருமான வரி சட்டத்தில் பல சிக்கல்களும் குழப்பங்களும் இருக்கின்றன. இது வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கும் கணக்கினை சரிபார்ப்பதற்கும் , புகார்களை சரி செய்வதற்கும் சிக்கலாக இருக்கிறது. இந்நிலையில் அதனை எளிமைப்படுத்தும் வகையில் புதிய வருமான வரி சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
புதிய வருமான வரி சட்டத்தில் வருமான வரி விகிதமோ அல்லது வருமான வரி உச்ச வரம்போ மாற்றப்படவில்லை. அதற்கு மாறாக எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி விதிகள் மற்றும் படிவங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வரி செலுத்துவோர் புதிய படிவங்கள், விதிகளை பற்றி அறிந்து கொள்ள விரிவான கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். பழைய சட்டத்திற்கும் இதற்கும் உள்ள வித்தியாசமே எளிமையான விதிமுறைகள் தான். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது மற்றும் வருமான வரி சட்டம் சம்பந்தப்பட்ட பிரிவுகளை இதில் எளிமையாக்கி இருக்கிறார்கள். 1961 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பழைய வருமான வரி சட்டத்துடன் ஒப்பிடும்போது புதிய வருமான வரி சட்டத்தில் எண்ணிக்கை விதிகள் பாதி அளவு குறைக்கப்பட்டு இருக்கின்றன.
அது தவிர வருமான வரி தொடர்பான வழக்குகளை குறைப்பதை நோக்கமாக கொண்டு இந்த சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. பழைய சட்டத்தில் முந்தைய ஆண்டு , மதிப்பீட்டு ஆண்டு என இரண்டு முறை காட்டும் ஆனால் அது தற்போது ஒற்றை வரி ஆண்டாக மாற்றி இருக்கிறார்கள். அடுத்ததாக வருமானத்தை தாமதமாக தாக்கல் செய்தால் டிடிஎஸ் பணம் திரும்ப பெற முடியாது. ஆனால் புதிய வருமான வரி சட்டத்தின் படி நீங்கள் வருமானத்தை தாமதமாக தாக்கல் செய்தாலும் கூட எந்த அபராதமும் இல்லாமல் டிடிஎஸ் பணத்தை திரும்ப பெற முடியும்.


Click it and Unblock the Notifications