நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் புதிய வருமான வரி நடைமுறையின் கீழ் வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
இந்தியாவில் பழைய வருமான வரி கணக்கு நடைமுறை மற்றும் புதிய வருமான வரி கணக்கு நடைமுறை என இரண்டு முறைகளில் நாம் வருமான வரியினை தாக்கல் செய்ய முடியும். இதில் பழைய வரி கணக்கு நடைமுறையில் பிரிவு 80c இன் நம்முடைய சேமிப்பு திட்டங்கள் மற்றும் முதலீடு திட்டங்களுக்கான பங்களிப்புகளை குறிப்பிட்டு வருமான வரி விலக்கை பெற முடியும். அதே வேளையில் புதிய வரி கணக்கு நடைமுறையில் இத்தகைய சலுகைகள் எதுவும் கிடையாது. ஆனால் அதிகபட்ச வருமான வரி உச்சவரம்பு கிடைக்கும்.

பெரும்பாலான மக்கள் புதிய வருமான வரி கணக்கு நடைமுறைக்கு மாற வேண்டும் என்பதே அரசின் இலக்காக இருக்கிறது . இந்த நிலையில் தான் பட்ஜெட்டில் புதிய வரி கணக்கு நடைமுறைக்கு மட்டுமே சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வருமான வரித்துறை தன்னுடைய அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் புதிய வருமான வரி கணக்கு முறையில், பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகளின் படி வருமான வரி கணக்கினை தாக்கல் செய்பவர்கள் எவ்வளவு வரியை சேமிக்க முடியும் என்பதை கணக்கீடு செய்ய கால்குலேட்டர் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
எனவே https://incometaxindia.gov.in/Pages/tools/115bac-tax-calculator-finance-bill-2025.aspx இந்த வருமான வரி பக்கத்திற்கு சென்று கால்குலேட்டர் சேவையை பெற முடியும். இதில் தனிநபர்கள் மட்டுமே தங்களுடைய வருமான வரியினை கணக்கீடு செய்ய முடியும். அதில் இந்தியாவில் இருப்பவர்கள் அல்லது வெளிநாட்டில் தங்கி இருக்கும் இந்தியர்களா என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
இதனை அடுத்து வருமானம் எவ்வளவு என்பதை உள்ளீடு செய்தால் அண்மையில் அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்களின் படி உங்களுக்கு எவ்வளவு வரி வருகிறது தற்போது உள்ள நடைமுறைகளின் படி எவ்வளவு வரி வருகிறது என்பது காட்டும். பட்ஜெட்டில் அறிவித்த மாற்றங்களின் படி எவ்வளவு வரி உங்களால் சேமிக்க முடியும் என்பதையும் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு கணக்கீடு செய்து பார்ப்பவர்கள் தங்களுக்கு பழைய வருமான வரி கணக்கு நடைமுறை உகந்ததா அல்லது புதிய வருமானவரி கணக்கு உகந்ததா என்பதை அறிந்துகொண்டு அதற்கு ஏற்றபடி முடிவு எடுத்துக் கொள்ளலாம்.
உதாரணமாக ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் வருமானம் கொண்டவர்கள் தற்போதுள்ள புதிய வருமான வரி கணக்கு நடைமுறையின் கீழ் உங்களுக்கு 1,45,600 ரூபாய் வரி செலுத்த வேண்டும். அதுவே பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகளின் படி கணக்கீடு செய்து பார்த்தால் 1,09,200 ரூபாய் மட்டுமே வரியாக வருகிறது. எனவே புதிய வரி கணக்கு நடைமுறையில் இந்த புதிய சலுகைகளை உள்ளீடு செய்தால் உங்களுக்கு 36,400 ரூபாய் வரி மிச்சம் செய்யப்படுகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications