இந்திய வருமான வரித்துறையினர் வரி ஏய்ப்பை தடுக்க சமீப காலமாக கடுமையான நடவடிக்கைகளையும், சோதனைகளையும் செய்து வருகின்றது. ஒருப்பக்கம் ஜிஎஸ்டி இன்வாய்ஸ் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கும் வேளையில் மறுமுனையில் கேரளாவில் நடந்த வருமான வரி துறை சோதனை வருமான வரித்துறையினரின் அதிரடியை காட்டுகிறது.
வியாழக்கிழமை கேரளா முழுவதும் உள்ள பிரபல யூடியூபர்கள் மற்றும் கன்டென்ட் கிரியேட்டர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். பல யூடியூபர்கள் மற்றும் வீடியோ கன்டென்ட் கிரியேட்டர்கள் தங்கள் வருமானத்திற்கு ஏற்ப வரி செலுத்தவில்லை என்பது தெரிய வந்ததை அடுத்து சோதனை நடத்தப்பட்டது.

இந்த வருமான வரி துறையினரின் சோதனையில் மளையாள நடிகை பேர்லே மானி உட்பட 13 முக்கிய யூடியூபர்கள் மற்றும்கன்டென்ட் கிரியேட்டர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளது. எர்ணாகுளம், பத்தனம்திட்டா, திருச்சூர், ஆலப்புழா, கோட்டயம், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.
இன்றைய கடுமையான வருமான வரி நடவடிக்கையின் கீழ் ஒருவர் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை செய்தது என்பதை விட வருமான வரித்துறையினர் வரி ஏயப்பு சார்ந்த ஆவணங்களை கைப்பற்றியுள்ளதா? கணக்கில் காட்டாத வருமானம் சிக்கியுள்ளதா? என்பதே கவனிக்க வேண்டியவை. பல பிரபலங்கள் வீட்டில் அவ்வபோது வருமான வரி துறை சோதனை செய்வது வழக்கமாக கொண்டு உள்ளது, குறிப்பாக அட்வான்ஸ் டாக்ஸ் செலுத்தும் நேரத்தில் இது நடக்கும்.
கேரளா முழுவதும் உள்ள பிரபல யூடியூபர்கள் மற்றும் கன்டென்ட் கிரியேட்டர்களின் வீடுகளிள் செய்யப்பட்ட சோதனை குறித்து வருமான வரித் துறை வட்டாரங்கள் கூறுகையில், யூடியூபர்கள் தங்களுக்கு நிலையான வருமானம் இல்லை என்றும், யூடியூப் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் இருந்து அவர்கள் பெறும் மாதாந்திர கொடுப்பனவுகள் அவர்களின் கன்டென்ட்களை பார்க்கும் பார்வையாளர்களைப் பொறுத்தது என தெரிவிக்கின்றனர். இதனால் வரி செலுத்துவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வருமான வரி துறையினர் யூடியூபர்கள் ஈட்டிய வருவாய் தொடர்பான வங்கி அறிக்கைகள் மற்றும் பிற பரிவர்த்தனை விவரங்களையும் இந்த சோதனையில் ஆய்வு செய்தது. அடுத்த சில நாட்களில் கேரள மாநிலத்தில் உள்ள மற்ற யூடியூபர்களை குறிவைத்து சில சோதனைகள் நடைபெற உள்ளதாகவும் வருமான வரி துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனவே முன்னெச்சரிக்கையாக தமிழ்நாட்டில் இருக்கும் யூடியூபர்கள் மற்றும் கன்டென்ட் கிரியேட்டர்கள் தங்களுடைய வருமான கணக்கை சரிபார்த்துக்கொள்ளவது உத்தமம்.


Click it and Unblock the Notifications