இந்தியாவின் முன்னணி உள்ளாடை மற்றும் ஆடை தயாரிப்பு நிறுவனமான லக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகின் பல நாடுகளில் வர்த்தகம் செய்து வருகிறது.
இந்த நிலையில் லக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கொல்கத்தா தலைமை அலுவலகத்தில் வருமான வரித் துறை சோதனை நடத்தியதாக அறிக்கைகள் வெளியானதைத் தொடர்ந்து, செப்டம்பர் 22, வெள்ளிக்கிழமை லக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 3 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தன.

லக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரி ஏய்ப்பு செய்ததாக ஐடி துறை புகார் கூறியுள்ளதாக ஏஎன்ஐ டிவீட் செய்துள்ளது. லக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய பல நகரங்களில் இருக்கும் அலுவலகம், வீடுகள், சொத்துக்களில் வருமான வரித்துறை இன்று ரெய்டு நடத்தியுள்ளது.
வருமான வரித்துறை இந்த தேடுதல் வேட்டையில் லக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தியுள்ளது என ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.
லக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நிதி விவகாரங்கள் தொடர்பாக ஏதேனும் முறைகேடுகளை செய்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய ஆவணங்களை சேகரிக்கும் நோக்கில் வருமான வரித்துறை இந்த சோதனைகளை நடத்தியுள்ளது. இந்த நிலையில் லக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவதாக உறுதி செய்துள்ளதோடு நிர்வாகம் முழு ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தகத்தில் லக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 3.22 சதவீதம் சரிந்து 1,471.25 ரூபாய் வரையில் சரிந்துள்ளது. இன்று அதிகப்படியாக 1,451 ரூபாய் வரையில் சரிந்துள்ளது. ஜூன் காலாண்டில் லக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் லாபம் 57 சதவீதம் சரிந்து 44 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேவேளையில் இந்நிறுவனத்தின் வருவாய் 23 சதவீதம் அதிகரித்து 715 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications