2023-24 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யக் கடைசி நாள் ஜூலை 31 என்பதால் பெரும்பாலான மக்கள் இப்போது தான் தங்களுடைய வருமான வரி அறிக்கையைத் தயார் செய்து வருகின்றனர். ஆனால் பலர் ஜூன் மாதமே வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்துவிட்டு ரீபண்ட் பணத்திற்காகக் காத்திருக்கின்றனர்.
நீங்க எப்போது வருமான வரி தாக்கல் செய்தாலும் சரி இந்த தப்பு மட்டும் பண்ணிடாதீர்கள், அபராதம் தாண்டி ஜெயில் தண்டனையும் இருக்கு என வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னையில் நடந்த முக்கிய கூட்டத்தில் அனைத்து மாத சம்பளக்காரர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வருமான வரித் துறை அதிகாரிகள், வரி விலக்கு மற்றும் வருமானத்தைக் குறைத்து கணக்குக் காட்டி வரியைக் குறைப்பது போன்ற போலியான விபரங்களைக் கொண்டு வருமான வரி அறிக்கை (ஐடி ரிட்டன்) தாக்கல் செய்தால், அபராதம் விதிக்கப்படுவதோடு, கடுமையான அபராதத்தையும் விளைவிக்கும் என எச்சரித்துள்ளனர்.
சவுத் சென்டல் ரயில்வே (SCR) உடன் இணைந்து, வருமான வரித் துறை அதிகாரிகள், ஜூலை 2ஆம் தேதி ரயில்வே ஊழியர்களுக்காக வருமான வரி தொடர்பாக ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜயவாடா டிவிஷனல் ரயில்வே மேனேஜர் (DRM) நரேந்திர ஏ. பாட்டீல் கூறுகையில், பல ஊழியர்கள் தங்களின் வருமானம் குறித்த விவரங்களையும் இடைத்தரகர்கள் அல்லது கணக்காளர்களிடம் கொடுத்து அவர்கள் மூலமாக ஐடி ரிட்டர்ன் தாக்கல் செய்கின்றனர்.
இடைத்தரகர்கள் தவறாக வழிநடத்தி, போலியான அல்லது தவறான விபரங்கள் உடன் வருமான வரி தாக்கல் செய்தால், நீங்கள் தான் சிக்கலில் சிக்கிக் கொள்வீர்கள் என்று எச்சரித்தார்.
வருமான வரிச் சட்டம் மிகவும் கடுமையானது. சில ஊழியர்கள் இது தொடர்பாகக் கவனக்குறைவாக இருக்கிறார்கள், அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வெறும் இரண்டு மணி நேரம் செலவழித்து, ஐடி சட்டங்கள் மற்றும் விதிகளைப் படித்துவிட்டால் யார் வேண்டுமானாலும் வருமான வரி தாக்கல் செய்யலாம். எனவே சொந்தமாக ரிட்டர்ன் தாக்கல் செய்யுங்கள் என்று கூறினார் நரேந்திர ஏ. பாட்டீல்.
இவரைத் தொடர்ந்து பேசிய வருமான வரி இணை ஆணையர் என்.அபிநயா 2022-23 மற்றும் 2023-24 ஆண்டுகளில் சில மாத சம்பளக்காரர்கள் போலி விபரங்களைச் சமர்ப்பித்து வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்தது வருமான வரி துறையினரால் கண்டறியப்பட்டது. இந்த போலியான விபரங்கள் கொண்டு மோசடி செய்பவர்களுக்கு 200% அபராதத்தையும், சிறைத் தண்டனையையும் கிடைக்க வாய்ப்பு உண்டு எனத் தெரிவித்தார்.
சமீபத்தில் வருமான வரி துறையினர் போலியான HRA கிளைம், வீட்டு வீட்டு வாடகை அளித்தாகப் போலியான பான் கார்டு விபரங்களை கொடுத்தது, போலியான மருத்துவச் செலவுகள் எனப் பல விஷயங்களில் தனிநபர்கள் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யும் போது போலியான விபரங்களைக் கொடுப்பதாக கண்டுபிடித்தது.
இதனால் இந்த வருடம் வருமான வரி துறையினர் கடுமையான ஆய்வுகளை ஒவ்வொரு வருமான வரி தாக்கலிலும் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வருமான வரி துறை அதிகப்படியான டெக் கட்டமைப்புகளை வருமான வரி ஆய்வில் ஈடுபடுத்தியிருக்கும் வேளையில் ஏஐ சேவைகள் வந்துள்ளது. எனவே சிறு தவறும் பெரும் அபராதம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவீர்கள், எச்சரிக்கை உடன் வருமான வரி தாக்கல் செய்வது உத்தமம்.


Click it and Unblock the Notifications