புதிய வருமான வரி மசோதாவில், சிறு வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், பிரிவு 44AD பிரிவின் கீழ் சிறு வணிகங்களுக்கு ரூ.2 கோடியிலிருந்து ரூ.3 கோடியாகவும், சிறப்பு சேவை அளிக்கும் நிபுணர்களுக்கு அதாவது ப்ரொபஷனல்-களுக்கு ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.75 லட்சமாகவும் உயர்த்தப்பட்டு 2023 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதில் எவ்விதமான மாற்றமும் இன்றி தொடரும் என புதிய வருமான வரி மசோதாவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரிவு 44AD என்பது ஒரு அனுமான வரி விதிப்புத் திட்டமாகும். இந்தத் திட்டம் சிறு வணிகங்களுக்கும், ப்ரொபஷனல்-கள் அளிக்கும் சேவைகளுக்கும் கிடைக்கும் வருமானத்தை கணக்கிடுவதில் உள்ள சிக்கல்களைக் குறைத்து, விரைவாகவும் எளிதாகவும் வரி செலுத்த உதவுகிறது.

Section 44AD பலன் யாருக்கெல்லாம் கிடைக்கும்?
பிரிவு 44AD கீழ் தனிநபர்கள், இந்து கூட்டு குடும்பம் மற்றும் குடியுரிமை பெற்ற கூட்டாண்மை நிறுவனங்கள் (எல்எல்பி அல்லாதவை) வணிகத்தில் ஈடுபட்டு, ஒரு ஆண்டில் வருமான வரி பிரிவு 10A/10AA/10B/10BA அல்லது 80HH முதல் 80RRB வரையில் எந்த விதமான வருமான வரி கழிவுகளைக் கோரவில்லை என்றால், இந்த பிரிவின் கீழ் சலுகை பெறலாம். ஆனால் பின்வரும் வணிகங்கள் இதில் அடங்காது:
பிரிவு 44AE இல் குறிப்பிடப்பட்டுள்ள தள்ளு வண்டிகளை இயக்குதல், வாடகைக்கு விடுதல் அல்லது குத்தகைக்கு விடுதல் வணிகம்,
ஏஜென்சி வணிகத்தை நடத்துபவர்,
கமிஷன் அல்லது தரகு வடிவில் வருமானம் ஈட்டுபவர்,
பிரிவு 44AA (1) இன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட எந்தவொரு தொழிலிலும் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த பிரிவின் கீழ் சலுகை பெற முடியாது.
Section 44AD லிமிட்:
இதில் அல்லாத நபரின் வருடாந்திர மொத்த வருவாய் அல்லது வணிகத்திலிருந்து பெறப்படும் மொத்த வருமானம் ரூ.3 கோடியைத் தாண்டாத வரை, பிரிவு 44AD இன் அனுமான வரித் திட்டத்தைப் பயன்படுத்தலாம். நிபுணத்துவ சேவை அதாவது ப்ரொபஷனல் சேவை வழங்குபவர்களுக்கு இது 75 லட்சத்தைத் தாண்டக்கூடாது.
வருமான வரி கணக்கீடு:
ஒரு பிஸ்னஸ் அல்லது தனிநபர் பிரிவு 44AD இன் விதிகளை பின்பற்றினால், அவர்களின் வருமானம் சாதாரண வருமான வரி முறையில் கணக்கிடப்படாது, ஒரு ஆண்டிற்கான மொத்த வருவாய் அல்லது மொத்த ரசீதுகளில் 8% (டிஜிட்டல் ரசீதுகளுக்கு 6%) வரிக்கு உட்பட்ட வருமாக கணக்கிடப்படும். இதில் ஆண்டு வருவாய் ரூ.3 கோடிகளுக்குக் குறைவாக அல்லது சமமாக இருக்க வேண்டும்.
ஏன் குறைவாக கணக்கிடப்படுகிறது:
ஒரு வணிகர் தனது மொத்த வருவாயில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை தனது லாபமாகக் கருதி, அதன் மீது வருமான வரி செலுத்த இந்த Section 44AD வாய்ப்பு அளிக்கிறது. அதாவது செலவுகளுக்கும், வருமானத்திற்கும் மத்தியிலான தொகை. இதன் மூலம் 3 கோடி ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் செலவையும் கணக்கிட்டு, லாப நஷ்டத்தை ஆராய்ந்து வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இதேபோல் கணக்கையும் மெயின்டெயின் செய்ய தேவையில்லை.
உதாரணம்:
ஒரு தனிநபர் நடத்தும் வணிகத்தில் ஆண்டு வருவாய் ரூ.2 கோடி என்று வைத்துக்கொள்வோம். எனவே, பிரிவு 44AD இன் படி, டிஜிட்டல் ரசீதுகளில் 6% மட்டுமே லாபமாக அறிவிக்கப்பட வேண்டும்.
இந்த எடுத்துக்காட்டின் படி, வருவாய் ரூ.2,00,00,000 மற்றும் அனுமான வரித் திட்டத்தின்படி, 6% டிஜிட்டல் ரசீதுகள் காட்டப்பட வேண்டும், அதாவது ரூ.12,00,000.
புதிய வரி விகிதப் பலகையின்படி, டிஜிட்டல் ரசீதுகளில் பின்வருமாறு வரி கணக்கிடப்படும்: இதில் மொத்த வருமானம் = ரூ.12,00,000
இதில்
ரூ.4 லட்சம் வரை 0% வரி
ரூ.4 லட்சம் - 8 லட்சம் = ரூ.4,00,000 * 5% = ரூ.20,000
ரூ.8 லட்சம் - 12 லட்சம் = ரூ.4,00,000 * 10% = ரூ.40,000
மொத்த வரிப் = ரூ.60,000
பூஜ்ஜியம்
புதிய வரி முறையின் கீழ் ரூ.12,00,000 வரை வரி விதிக்கக்கூடிய வருமானம் வரி இல்லாதது. ஏனெனில், பிரிவு 87A இன் கீழ் தள்ளுபடி வரிப் பொறுப்பு 'பூஜ்ஜியம்', அதாவது நீங்கள் ரூ.2,00,00,000 வருவாய்க்கு பூஜ்ஜிய வரி செலுத்த வேண்டும்.
இதுவே உங்களுடைய வருமானம் 2 கோடியை தாண்டினாலோ அல்லது 8 சதவீதம் அளவில் கணக்கிடப்பட்டாலோ வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
முக்கிய கண்டிஷன்
இந்தத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்தால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அதைப் பின்பற்ற வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அனுமான வரித் திட்டத்தை பயன்படுத்த முடியாது.
பிரிவு 44ADA இன் கீழ் தகுதியான ப்ரொபஷனல்:
ரூ.75 லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருமானம் ஈட்டும் ப்ரொபஷனல்-களுக்கு இந்த பிரிவு 44ADA பலன் கிடைக்கும். பின்வரும் குறிப்பிட்ட தொழில்களைச் செய்பவர்களும் இந்த பிரிவின் கீழ் தகுதியானவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
அக்கவுண்டெட்
மருத்துவ சேவைகள்
சட்ட சேவைகள்
தொழில்நுட்ப ஆலோசகர்கள்
இன்ஜினியர்கள்
ஆர்கிடெக்ச்சர்
இன்டீரியர் டெக்கரேட்டார்ஸ்
திரைப்படக் கலைஞர்கள்
நிறுவன செயலாளர்கள்
இவர்களை தாண்டி மத்திய நேரடி வரிகள் வாரியம் குறிப்பிட்டுள்ள சில தொழில்களுக்கும் இதன் மூலம் சலுகை பெறலாம்.


Click it and Unblock the Notifications