இந்தியாவில் விழாக்கால தள்ளுபடிகள் மக்கள் மத்தியில் எப்போதும் அதிகப்படியான ஈர்ப்பை பெறும், அந்த வகையில் இந்தியாவில் விழாக்கால விற்பனையின் துவக்கமாக சுதந்திர தினத்தில் பல முன்னணி ஈகாமர்ஸ், ரீடைல் விற்பனை நிறுவனங்கள், முன்னணி பிராண்டுகள் அதிகப்படியான தள்ளுபடியை அறிவித்து பெரிய வர்த்தகத்தை பதிவு செய்துள்ளது.
இந்த வருடம் விலைவாசி உயர்வு காரணமாக அதிகப்படியான விற்பனை இருக்காது என சில தரப்புகள் தெரிவித்தாலும், ஒட்டுமொத்த சந்தையும் இந்த விழாக்கால விற்பனையை நம்பிதான் உள்ளது. சொல்லப்போனால் பல உற்பத்தி நிறுவனங்கள் சந்தையின் டிமாண்ட் எப்படியிருக்கும் என்பதை கணிக்க முடியாமல் அதிகளவில் உற்பத்தி செய்துள்ளன.

இப்படி பல குழப்பங்களுக்கு மத்தியில் இந்திய உற்பத்தி சந்தையும், ரீடைல் சந்தையும் போராடிக்கொண்டு இருக்கும் வேளையில் இந்த சுதந்திர தின தள்ளுபடி விற்பனை பெரிய நம்பிக்கை கொடுத்துள்ளது. பொதுவாக தீபாவளி, பொங்கல், தசரா ஆகிய பண்டிகை நேரங்களில் தான் தள்ளுபடி விற்பனை இருக்கும்.
ஆனால் கடந்த சில வருடங்களாக சுதந்திர தினத்தை முன்னிட்டும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் விற்பனை 25- 30 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.
ரீடைல் விற்பனை மட்டும் அல்லாமல் சுதந்திர தினத்தில் அறிவிக்கப்பட்டு உள்ள அதிரடி தள்ளுபடிகள் மற்றும் மொழி வாரியாக ரிலீஸாகியுள்ள திரைப்படங்கள் காரணமாக மால்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை 15 முதல் 20 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. இதேபோல் உணவகங்கள், ஆடை மற்றும் பேஷன் பிராண்ட் கடைகளின் விற்பனையும் வாடிக்கையாளர் வருகையும் இந்த சுதந்திர தினத்தில் அதிகரித்துள்ளது.
முக்கியமாக ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தகம் 25 வருடாந்திர அடிப்படையில் அதிகரித்துள்ளது, எலக்ட்ரானிக்ஸ் விற்பனை நிறுவனமான விஜய் சேல்ஸ் நிறுவனத்தின் விற்பனை 12 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. இந்தியாவில் 11 மால்களை நிர்வாகம் செய்யும் பீனிக்ஸ் தரவுகள் படி 20 சதவீத அதிக மக்கள் வருகையை சந்தித்துள்ளது.
சுந்திர தின தள்ளுபடி விற்பனை தான் அடுத்து வரும் ஓணம், துர்கா பூஜா, தசரா, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விற்பனையின் சிக்னல் ஆக இருக்கிறது. இந்த சுதந்திர தின தள்ளுபடி விற்பனையில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பொருட்களின் லிஸ்ட்: ஸ்டமார்ட்போன், லேப்டாப், டிவி, ஃபிரிட்ஜ், தினசரி தேவையான பொருட்கள், FMCG பொருட்கள், கடைசியாக உணவகங்களில் விற்பனையாகும் உணவுகள்.


Click it and Unblock the Notifications