சுத்தமான எரிசக்தி உற்பத்தியில் இந்தியா உலக அரங்கில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. சென்னைக்கு அருகில் கல்பாக்கத்தில் அமைந்துள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் (IGCAR), அணு உலை வெப்பத்தை பயன்படுத்தி ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் உலகின் முதல் மற்றும் புதுமையான தொழில்நுட்ப மையத்தை மத்திய அணுசக்தித் துறை தொடங்கி வைத்துள்ளது.
இந்தியாவின் மேம்பட்ட அணுசக்தி தொழில்நுட்பத்தையும் கிரீன் ஹைட்ரஜன் உற்பத்தி இலக்கையும் ஒரே நேரத்தில் முன்னெடுக்கும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

அணு உலை வெப்பத்தில் ஹைட்ரஜன்
இந்த புதிய மையத்தில், மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ள "காப்பர்-குளோரின் (Copper-Chlorine)" தெர்மோகெமிக்கல் சுழற்சி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
வழக்கமான ஹைட்ரஜன் உற்பத்தி முறைகளில் புதைபடிவ எரிபொருட்கள் அல்லது அதிக மின்சாரம் பயன்படுத்து வெப்பம் உருவாக்கி பயன்படுத்தும் நிலையில், இந்த தொழில்நுட்பத்தில் அணு உலையில் இருந்து கிடைக்கும் வெப்பத்தை பயன்படுத்தி ஹைட்ரஜனை உருவாக்குகிறது. இதன் மூலம் கார்பன் உமிழ்வு இல்லாத சுத்தமான ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய முடியும்.
பல ஆண்டுகள் ஆராய்ச்சியின் பலன்
இந்த திட்டம் ஒரே நாளில் உருவானதல்ல. பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) மற்றும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR) இணைந்து பல ஆண்டுகளாக ஆராய்ச்சி, தொழில்நுட்ப வடிவமைப்பு, பொறியியல் மேம்பாடு, உபகரண உற்பத்தி, நிறுவல், சோதனை மற்றும் செயல்படுத்தும் பணிகளை மேற்கொண்ட பிறகே இந்த மையம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
ஹைட்ரஜன் வாயு (Hydrogen Gas) தொழில்துறை உற்பத்தி, தூய்மையான எரிசக்தி, விண்கலப் பயணம், மற்றும் மருத்துவ ஆராய்ச்சி ஆகிய துறைகளில் முக்கியமாக உதவுகிறது. உரங்கள் தயாரிக்கத் தேவையான அம்மோனியா உருவாக்கத்தில் பயன்படுகிறது. கச்சா எண்ணெயைச் சுத்திகரித்து பெட்ரோல், டீசலாக மாற்றும் 'ஹைட்ரோ-கிராக்கிங்' (Hydro-cracking) முறையில் பயன்படுகிறது. விண்கலங்களை (Rockets) உந்தித் தள்ளும் திரவ எரிபொருளாகப் பயன்படுகிறது.
அணு உலை வெப்பத்தையும் ஹைட்ரஜன் உற்பத்தியையும் ஒருங்கிணைத்திருப்பது மிகப்பெரிய தொழில்நுட்ப முன்னேற்றம் என்று IGCAR தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் மேம்பட்ட அணு உலைகளை பயன்படுத்தி மிகப்பெரிய அளவில் கார்பன் இல்லாத ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் பாதையை இந்த சாதனை திறந்து வைத்துள்ளது. இதன் மூலம் விவசாய உரம் மற்றும் எரிபொருள் உற்பத்தியிலும் இந்தியா தன்னிறைவை பெறும்.
ஹைட்ரஜன், எதிர்காலத்தின் முக்கிய எரிசக்தி வளமாக உலக நாடுகளால் கருதப்படுகிறது. தொழிற்துறை, போக்குவரத்து மற்றும் ஆற்றல் சேமிப்பு உள்ளிட்ட பல துறைகளில் இதன் பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணுசக்தி வெப்பத்தை பயன்படுத்துவதன் மூலம் புதைபடிவ எரிபொருட்கள் மீதான சார்பும், வாயு உமிழ்வும் குறைக்கப்படலாம்.


Click it and Unblock the Notifications

