டெல்லியில் நடக்கும் ஏஐ உச்சி மாநாடு தான் உலகமே உற்றுநோக்கும் நிகழ்வாக இருக்கிறது. ஏஐ உச்சிமாநாட்டில் சாட் ஜிபிடியின் ஓபன் ஏஐ நிறுவன தலைவரான சாம் ஆல்ட்மேன், ஆந்திரோபிக் தலைமை செயல் அதிகாரி டாரியோ, கூகுளின் சுந்தர் பிச்சை என பல முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
ஏஐ மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி அனைத்து தலைமை செயல் அதிகாரிகளும் ஒரே மேடையில் நின்று குழுப்படம் எடுத்து கொண்டனர். அப்போது போட்டி செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களான ஓபன்ஏஐ (OpenAI) மற்றும் ஆந்திரோபிக் (Anthropic) தலைமைச் செயல் அதிகாரிகள் குழு புகைப்படத்தின்போது கைகோர்க்க மறுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடி, ஓபன்ஏஐ-யின் சாம் ஆல்ட்மேனுடனான கருத்து வேறுபாடுகளால் 2021-ல் விலகியதே இந்த அசௌகரியத்திற்கான முக்கிய காரணம். இந்தியா ஏஐ இம்பாக்ட் உச்சிமாநாட்டிற்குப் பின், பிரதமர் நரேந்திர மோடியுடன் புகைப்படம் எடுக்க சுந்தர் பிச்சை (கூகுள்), சாம் ஆல்ட்மேன் (ஓபன்ஏஐ), டாரியோ அமோடி (ஆந்த்ரோபிக்) உள்ளிட்ட தலைவர்கள் அழைக்கப்பட்டனர். பிரதமர் மோடி அருகில் இருந்தவர்களின் கையைப் பிடித்து உயர்த்தக்கூற, சாம் ஆல்ட்மேனும் டாரியோ அமோடியும் கைகோர்க்க மறுத்தனர்.
இந்த நிகழ்வு கேமராவில் பதிவாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி, எக்ஸ் (X) தளத்தில் ட்ரெண்டிங் ஆனது. ஓபன்ஏஐ மற்றும் ஆன்த்ரோபிக் இரண்டும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் முன்னணி நிறுவனங்கள் என்றாலும், அவற்றின் அணுகுமுறையில் வேறுபாடுகள் உள்ளன.
ஓபன்ஏஐ சாட்ஜிபிடி (ChatGPT) போன்ற ஏஐ கருவிகளை விரைந்து உருவாக்கிப் பொது மக்களுக்குக் கிடைக்கச் செய்வதில் கவனம் செலுத்துகிறது. ஆனால், ஆன்த்ரோபிக் தனது க்ளாட் (Claude) சாட்பாட் மூலம், பாதுகாப்பு மற்றும் கவனமான செயல்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறுகிறது.
ஓபன்ஏஐ-ல் ஆய்வுத் துணைத் தலைவராக இருந்த டாரியோ அமோடி, நிறுவனத்தின் திசை குறித்த கவலைகளால் 2021-ல் விலகினார். பின்னர், தனது சகோதரி மற்றும் மூத்த ஆய்வாளர்களுடன் ஆன்த்ரோபிக்கை நிறுவினார். 2023-ல் பார்ச்சூன் பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில், "நீங்கள் வெறுமனே மாதிரிகளை வளர்த்தெடுப்பதோடு கூடுதலாக, அவற்றின் சீரமைப்பு அல்லது பாதுகாப்பைக் கருத்தில் கொள்ள வேண்டும். அதிக கணக்கீட்டு சக்தியைச் செலுத்துவதன் மூலம் மட்டும் மாதிரிகளுக்கு அவற்றின் மதிப்புகளைச் சொல்லிவிட முடியாது" என்று அவர் தெரிவித்தார்.
தற்போது இரு நிறுவனங்களும் ஏஐ பிரிவில் போட்டியாளராக இருக்கும் நிலையில் பொதுமேடையில் இரு தலைவர்களும் கை கோர்க்க மறுத்து தங்கள் வேறுபாடுகளை வெளிப்படையாக காட்டியது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications