இந்திய வங்கித் துறையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், நாட்டில் உள்ள பல பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைத்து, சர்வதேச அளவில் போட்டி போடும் திறன் கொண்ட பெரிய, உலக தரமான வங்கிகளை உருவாக்க மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்தப் புதிய திட்டம் குறித்து ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் வங்கித் துறை பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.
நவம்பர் 6-ஆம் தேதி மும்பையில் நடந்த ஒரு மாநாட்டில் பேசிய நிதியமைச்சர், "பெரிய வங்கிகளை உருவாக்குவது பற்றி ரிசர்வ் வங்கியின் யோசனை என்ன என்று நாங்கள் கேட்டு வருகிறோம். வங்கிகளை ஒருங்கிணைக்கும் இந்த முடிவை நான் சொல்வதற்கு முன் நிறைய வேலைகள் செய்ய வேண்டியுள்ளது. அந்தப் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன" என்று அவர் தெரிவித்தார்.

ஒருங்கிணைப்பின் நோக்கம் என்ன..?: பொதுத்துறை வங்கிகளை இணைப்பது என்பது புதிதல்ல. ஏற்கனவே பல சிறிய வங்கிகள் பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இப்போது மீண்டும் அடுத்த சுற்று ஒருங்கிணைப்புக்கான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் முக்கிய நோக்கம் என்னவென்றால், நாட்டில் அதிக எண்ணிக்கையிலான சிறிய வங்கிகளுக்கு பதிலாக, குறைவான எண்ணிக்கையிலான, ஆனால் நிதி ரீதியாக வலிமையான வங்கிகளை உருவாக்குவதுதான்.
இப்படி வலிமையான வங்கிகள் உருவானால், அவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான மிகப் பெரிய கடன்களை எளிதில் வழங்க முடியும். மேலும், இந்தியாவின் நிதித்துறையில் கொண்டு வரப்படும் புதிய சீர்திருத்தங்களை இந்த வங்கிகள் சிறப்பாக நடைமுறைப்படுத்த முடியும் என்று அரசு நம்புகிறது.
எந்தெந்த வங்கிகள் இணைக்கப்படலாம்..?: சந்தை வட்டார தகவல்களின்படி, அடுத்தகட்ட இணைப்பில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB), சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (CBI), பேங்க் ஆஃப் இந்தியா (BOI), மற்றும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா (BOM) போன்ற வங்கிகள், நாட்டின் பெரிய வங்கிகளான பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), பேங்க் ஆஃப் பரோடா (BoB) மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) போன்றவற்றுடன் இணைக்கப்பட வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.
ஆனால், இந்த இணைப்பு குறித்து அரசு எந்த ஓர் அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இன்னும் வங்கிகளுக்கு அனுப்பவில்லை. தற்போது பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள், தாங்கள் வெளியிட வேண்டிய பொதுப் பங்குகளின் அளவைச் சரியாக வைப்பதற்காக, அரசின் பங்குகளை குறைக்கும் வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த சூழலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்தப் பேச்சு, இந்தியாவின் வங்கித் துறையின் எதிர்காலப் பயணம் உலகத் தரம் நோக்கிச் செல்லும் வகையில் உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications