இந்திய பயணிகள் விமான சேவை துறையில் இண்டிகோ, ஏர் இந்தியா மட்டுமே ஆதிக்கம் செய்து வரும் வேளையில், இந்த நிறுவனத்தில் ஏதேனும் பிரச்சனை நடந்தால் நாட்டின் ஒட்டுமொத்த விமான சேவையும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதை களையும் வண்ணம் மத்திய அரசு இரு புதிய விமான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அல் ஹிந்த் ஏர் (Al Hind Air), ஃப்ளைஎக்ஸ்பிரஸ் (FlyExpress) ஆகியவை இரு நிறுவனங்களுக்கு விமான சேவையை துவங்க மத்திய சிவில் ஏவியேஷன் அமைச்சகம் நோ ஒப்ஜெக்ஷன் சான்றிதழ் வழங்கி அனுமதி அளித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷாங்க் ஏர் ஏற்கனவே அனுமதி பெற்று 2026இல் சேவை தொடங்க உள்ள நிவையில் மத்திய சிவில் ஏவியேஷன் அமைச்சர் ராம் மோகன் நாயுடு இரு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளதாக அறிவித்தார். இது இந்தியாவில் வேகமாக வளரும் விமான போக்குவரத்து சந்தையில் அதிக எண்ணிக்கையிலான விமான நிறுவனங்கள் தேவையை உணர்த்துகிறது.

இண்டிகோ நெருக்கடி
டிசம்பர் மாத தொடக்கத்தில் இண்டிகோ நிறுவனம் மிகப்பெரிய சேவை பாதிப்பை எதிர்கொண்டு ஒரு வாரத்தில் 5,000க்கு அதிகமான விமான பயணங்களை ரத்து செய்தது. டிசம்பர் 5இல் மட்டும் 1,600 விமானங்கள் இயக்கப்படாமல் லட்சக்கணக்கான பயணிகள் இந்தியா முழுவதும் இருக்கும் விமான நிலையங்களில் தவித்தனர். இது இந்தியாவின் உள்நாட்டு விமான போக்குவரத்தை பாதித்தது.
இண்டிகோ, ஏர் இந்தியா குழுமம் சேர்ந்து இந்திய விமான போக்குவரத்து சந்தையில் மொத்தம் 90 சதவீத சந்தை பங்கு வைத்துள்ளன. இந்த நெருக்கடி புதிய நிறுவனங்களுக்கான தேவையை உணர்த்தியுள்ளது. இதனால் மத்திய அரசு புதிய விமான நிறுவனங்களை ஊக்குவிக்க முயல்கிறது. மத்திய அரசின் UDAN திட்டம் மூலம் சிறு நிறுவனங்களான ஸ்டார் ஏர், இந்தியா ஒன் ஏர், ஃப்ளை91 ஆகியவற்றை வளர்த்துள்ளது. பிராந்திய இணைப்புக்கு இவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
இப்போது அல் ஹிந்த் ஏர், ஃப்ளைஎக்ஸ்பிரஸ் புதிதாக இப்பட்டியலில் சேர்வது மூலம் போட்டியை உயர்த்தும். கடந்த 10 ஆண்டுகளில் கோ ஃபர்ஸ்ட், ஜெட் ஏர்வேஸ் போன்ற நிறுவனங்கள் கடன் சுமை காரணமாக மூடப்பட்டன. ஏர் இந்தியா தனியார்மயமானது. இப்போது புதிய நிறுவனங்கள் வருவது சந்தையை விரிவாக்கும்.
இண்டிகோ புதிய சேவை
இந்த மாத துவக்கத்தில் இண்டிகோ ஏகப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொண்ட நிலையில் தற்போது புதிய விமான சேவையை அறிவித்துள்ளது. டெல்லி-லண்டன் (ஹீத்ரோ) இடையே பிப்ரவரி 2, 2026 முதல் வாரத்தில் ஐந்து முறை விமான சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த சேவைக்காக பிரத்தியேகமாக போயிங் 787 விமானங்கள் பயன்படுத்தப்படும். இண்டிகோ ஏற்கனவே மும்பையில் இருந்து லண்டனுக்கு தினசரி சேவை உள்ளது. இப்போது லண்டனுக்கு வாரத்தில் 12 விமானங்கள் இயக்கப்படும்.


Click it and Unblock the Notifications