இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் எதிர்பாராத விதமாக 8.3% ஆக உயர்ந்து, கடந்த மூன்றரை ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது.ஈரான் மோதல் காரணமாக அதிகரித்த எரிசக்தி செலவுகள், எரிபொருள் மற்றும் உற்பத்திப் பொருட்களின் விலைகள் உயர்ந்ததே இதற்குக் காரணம் என அரசின் பணவீக்க தரவுகள் கூறுகின்றன.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் கணிசமாக உயர்ந்தபோதிலும், பெட்ரோல், டீசல் மற்றும் வீட்டு உபயோக சமையல் எரிவாயுவின் சில்லறை விலைகளை அரசாங்கம் பெரும்பாலும் மாற்றாமல் வைத்துள்ளது. இதனால் குடும்பங்கள் எரிபொருள் விலை உயர்வின் உடனடித் தாக்கத்திலிருந்து காப்பாற்றப்பட்டன. இருப்பினும், வணிக ரீதியிலான எல்பிஜி சிலிண்டர் விலைகள் அதிகரித்துள்ளன, இது டீ, காபி, உணவுகளின் விலை உயர்வுக்கு வித்திட்டது.

ராய்ட்டர்ஸ் நிறுவனம் 4.4% என பணவீக்கத்தை கணித்திருந்த நிலையில், அதற்கு மாறாக வந்துள்ளது. முன்னதாக, மார்ச் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 3.88% ஆகவும், பிப்ரவரியில் 2.13% ஆகவும் இருந்தது. மொத்த விலை குறியீட்டெண் (WPI) அடிப்படையிலான பணவீக்கம், முந்தைய மாதமான மார்ச் 2026 உடன் ஒப்பிடுகையில் 3.86% அதிகரித்துள்ளது. "2026 ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட இந்த நேர்மறையான பணவீக்க விகிதம், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, அடிப்படை உலோகங்கள், பிற உற்பத்தி மற்றும் உணவு அல்லாத பொருட்களின் விலைகள் அதிகரித்ததே முக்கிய காரணம்" என்று மத்திய அரசு குறிப்பிட்டது.
பஜாஜ் புரோக்கிங் நிறுவனத்தின் ஆய்வாளர் சஷ்வத் சிங் கூறுகையில், "அதிகரித்து வரும் தளவாட, சரக்கு மற்றும் பொதுப் பொருட்களின் விலைகள் மொத்த விலை பணவீக்கத்தில் அதிகம் பிரதிபலிக்கின்றன. இது காலப்போக்கில் நுகர்வோர் பணவீக்கத்திற்கும் பரவக்கூடும். செலவு உயர்வை முழுமையாக நுகர்வோரிடம் கடத்த முடியாவிட்டால், உற்பத்தி மற்றும் தொழில்துறை நிறுவனங்களுக்கு இது லாப அழுத்தத்தை உருவாக்கும்" என்றார்.
மேலும், "உலக கச்சா எண்ணெய் விலைகளில் நிச்சயமற்ற தன்மை, விநியோகச் சங்கிலி தடங்கல்கள் மற்றும் நாணய பலவீனம் காரணமாக, மொத்த விலை பணவீக்கம் அதிகரித்து, நிலையற்றதாகவே இருக்கும், குறிப்பாக புவிசார் அரசியல் பதட்டங்கள் தொடரும் பட்சத்தில் இந்த நிலை நீடிக்கும்" என்றும் அவர் எச்சரித்தார்.இந்த மொத்த விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் விலைகளே முக்கிய உந்துசக்தியாகும். எரிபொருள் தொகுதியில் இருந்துதான் அதிகபட்ச அழுத்தம் உருவானது. இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 3.48% ஆக உயர்ந்தது, இதில் உணவுப் பொருட்களின் விலைகள் உறுதிப்பட்டதும் ஒரு காரணமாகும்.
ஏப்ரல் மாதத்தில் எரிபொருள் மற்றும் மின்சாரத் தொகுப்பில், முக்கிய எரிசக்திப் பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்தன. மார்ச் மாதத்தில் 1.54% குறைந்திருந்த எல்பிஜி பணவீக்கம், 10.92% ஆக உயர்வுகண்டது. அதேசமயம், பெட்ரோல் பணவீக்கம் முந்தைய மாதம் 2.50% ஆக இருந்ததிலிருந்து 32.40% ஆகவும், அதிவேக டீசல் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 3.26% ஆக இருந்ததிலிருந்து 25.19% ஆகவும் அதிகரித்துள்ளன. புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் உலகளாவிய எண்ணெய் விலைகள் அதிகரித்ததால், எரிபொருள் மற்றும் மின்சாரப் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 1.05% ஆக இருந்ததிலிருந்து ஏப்ரலில் 24.71% ஆக உயர்ந்தது. கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுப் பணவீக்கம் 67.18% ஆகவும், பெட்ரோல் பணவீக்கம் 32.4% ஆகவும், அதிவேக டீசல் 25.19% ஆகவும் அதிகரித்தன.
மாதாந்திர அடிப்படையில் பார்த்தால், எரிபொருள் மற்றும் மின்சார விலைகள் 18.22% உயர்ந்து மொத்த விலை உயர்வில் ஒரு பெரிய பங்கை கொண்டுள்ளன. எரிசக்தி செலவுகளின் அதிகரிப்பு தொழிற்சாலை விலைகளிலும் பரவி, உற்பத்தி செலவுகளுக்கு வேகமூட்டியுள்ளது.உற்பத்திப் பொருட்களின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 3.39% ஆக இருந்ததிலிருந்து ஏப்ரலில் 4.62% ஆக அதிகரித்தது. இரசாயனங்கள், ஜவுளி, இயந்திரங்கள் மற்றும் அடிப்படை உலோகங்கள் ஆகியவற்றின் விலையேற்றமே இதற்கு முக்கிய காரணமாகும். குறிப்பாக, அடிப்படை உலோகங்களின் பணவீக்கம் 7% ஆகவும், இரசாயனங்கள் மற்றும் இரசாயனப் பொருட்களின் பணவீக்கம் 5.09% ஆகவும் உயர்ந்தன.


Click it and Unblock the Notifications

