இந்திய அரசு, பாகிஸ்தானிலிருந்து அல்லது பாகிஸ்தான் வழியாக வரும் அனைத்து பொருட்களின் இறக்குமதிக்கு உடனடியாக தடை விதித்துள்ளது. கடந்த மாதம் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் பொது நலன் கருதி இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) அறிவித்துள்ளது.
பாகிஸ்தானுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் கடந்த மாதம் கஷ்மீரில் நடந்த ஒரு கொடூரமான தாக்குதலை நடத்தியதில் 26 பேர் மரணம் அடைந்தனர். இதனால் இரு நாடுகள் மத்தியில் தற்போது போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த பதற்றமான சூழலில், இந்திய அரசு பாகிஸ்தானிலிருந்து வரும் அனைத்து பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளது. மே 2, 2025 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) இந்த தடையை உடனடியாக அமல்படுத்துவதாக தெரிவித்தது.

இந்திய அரசு 2023 வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையில் புதிய பிரிவு 2.20A சேர்க்கப்பட்டு, " தேசிய பாதுகாப்பு மற்றும் பொது நலன் கருதி பாகிஸ்தானிலிருந்து தயாரிக்கப்பட்ட அல்லது ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களின் நேரடி அல்லது மறைமுக இறக்குமதி தடை செய்யப்படும், மேலும் பாகிஸ்தான் வழியாக வந்த பொருட்களே அல்லது அவை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டவையாக இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் அனைத்தும் உடனடியாக தடை செய்யப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு, பாகிஸ்தானின் ஏற்கனவே பலவீனமான பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானின் ஏற்றுமதி துறை, குறிப்பாக சிமென்ட், ஜவுளி, மற்றும் விவசாய பொருட்கள் போன்றவை அட்டாரி - வாகா எல்லை வழி வர்த்தகத்தை பெரிதும் நம்பியுள்ளன. இந்தியாவுடனான முறையான வர்த்தகம் ஏற்கனவே குறைவாக இருந்தாலும், இந்த தடை முறைசாரா வர்த்தக பாதைகளையும் முடக்கி, பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மேலும் மோசமாக்கும்.
பாகிஸ்தான் ஏற்கனவே இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை நிறுத்தி வைத்திருந்தாலும், இந்தியாவின் இந்த முடிவு பாகிஸ்தானின் ஏற்றுமதி சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பாகிஸ்தானின் பொருளாதாரம், குறிப்பாக எல்லை வழி வர்த்தகத்தை நம்பியுள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், இந்த தடையால் கடுமையாக பாதிக்கப்படலாம்.
இந்தியாவின் மொத்த வர்த்தகத்தில் பாகிஸ்தானுடனான இருதரப்பு வர்த்தகம் வெறும் 0.06% மட்டுமே. எனவே, இந்த தடை இந்திய பொருளாதாரத்தில் எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது. DGFT-யின் அறிவிப்பின்படி, இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது மற்றும் மறு உத்தரவு வரும் வரை தொடரும்.
2018 முதல் 2024 வரை இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் 2.41 பில்லியன் டாலரில் இருந்து 1.2 பில்லியன் டாலராக குறைந்தது. பாகிஸ்தானின் இந்தியாவுக்கான ஏற்றுமதி 2019ல் 547.5 மில்லியன் டாலராக இருந்தது, 2024ல் வெறும் 480,000 டாலராக ஆக சரிந்தது.
இந்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2024 ஏப்ரல் முதல் 2025 ஜனவரி வரை இந்தியாவின் பாகிஸ்தான் ஏற்றுமதி 447.7 மில்லியன் டாலராக உள்ளது. இதில் மருந்துப் பொருட்கள், பெட்ரோலியம், பிளாஸ்டிக், ரப்பர், கெமிக்கல், சாயங்கள், காய்கறிகள், மசாலாப் பொருட்கள், காபி, தேநீர், பால் பொருட்கள் மற்றும் தானியங்கள் ஆகியவை அடங்கும்.
அதே காலகட்டத்தில், பாகிஸ்தானின் இந்தியாவுக்கான ஏற்றுமதி 420,000 டாலர் மட்டுமே. இதில் செம்பு, கண்ணாடிப் பொருட்கள், கரிம இரசாயனங்கள், கந்தகம், பழங்கள், பாதாம் பருப்பு மற்றும் சில எண்ணெய் விதைகள் முக்கியமானவை.


Click it and Unblock the Notifications