ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்தன. ஈரான் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனால் கச்சா எண்ணெய் பிரச்சினையும் தீரவில்லை. நாட்டில் தற்போதைக்கு பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை என்றாலும் மத்திய அரசு முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் பெட்ரோல் விற்பனையில் சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய உத்தரவில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பெரிய அமைப்புகள் போன்ற மொத்தமாக எரிபொருள் வாங்குபவர்கள் (Bulk Users), இனி சாதாரண சில்லறை பெட்ரோல் பங்குகளில் (Retail Petrol Pumps) சென்று பெட்ரோல் மற்றும் டீசல் வாங்க தற்காலிகத் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு ஜூன் 11 முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இந்த கட்டுப்பாடு முதற்கட்டமாக 90 நாட்களுக்கு அதாவது 3 மாதங்கள் அமலில் இருக்கும், தேவைப்பட்டால் இது மேலும் நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது டெல்லியில் சாதாரண பெட்ரோல் பங்குகளில் ஒரு லிட்டர் டீசல் 95.20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால், தொழிற்சாலைகளுக்கு நேரடியாக வழங்கப்படும் மொத்த டீசலின் (Bulk Diesel) விலை லிட்டருக்கு 134.50 ரூபாயாக உள்ளது. ஒரு லிட்டருக்கு சுமார் 39 ரூபாய் வித்தியாசம். விலை வித்தியாசம் காரணமாக, தொழிற்சாலைகள் மற்றும் டெலிகாம் டவர் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான டீசலை மொத்தமாக வாங்குவதை நிறுத்திவிட்டு, சாதாரண பெட்ரோல் பங்குகளில் வந்து கார்டுகளிலும் கேன்களிலும் லாரிகளிலும் வாங்குகின்றன.
இதனால் நாட்டின் சில பகுதிகளில் சாதாரண பொதுமக்களுக்குக் கிடைக்க வேண்டிய பெட்ரோல், டீசல் தீர்ந்துபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்கவே அரசு இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வணிக மற்றும் தொழிற்துறை நுகர்வோர் இனி சில்லறை பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் வாங்க முடியாது. அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட மொத்த விற்பனை நிலையங்கள் மூலமாக மட்டுமே வாங்க வேண்டும்.
சாதாரண பெட்ரோல் பங்குகளில் ஒரு வாகனத்திற்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 200 லிட்டர் டீசல் மட்டுமே வழங்கப்படும். பங்குகளில் வாங்கும் டீசலை எக்காரணம் கொண்டும் மற்றவர்களுக்கு மறுவிற்பனை செய்யக் கூடாது என அரசு அறிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் பதுக்கல், கள்ளச் சந்தை விற்பனை மற்றும் விதிகளை மீறி எரிபொருள் கடத்துபவர்கள் மீது அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் (Essential Commodities Act) கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த உத்தரவால் சாமானிய மக்கள் பெட்ரோல், டீசல் வாங்குவதில் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. இந்த உத்தரவு முழுக்க முழுக்க பெரிய தொழிற்சாலைகள் மற்றும் வணிக ரீதியாக மொத்தமாக பெட்ரோல், டீசல் வாங்குபவர்களை மட்டுமே கட்டுப்படுத்தும். சாதாரண பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் பெட்ரோல், டீசல் தங்கு தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்யவே அரசு இந்தத் தற்காலிக தடையைக் கொண்டுவந்துள்ளது.


Click it and Unblock the Notifications

