டெல்லி: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் ரஷ்யா 44% கச்சா எண்ணையை இந்தியாவுக்கு விற்பனை செய்துள்ளது. அதாவது ஒரு நாளைக்கு 2.07 மில்லியன் பாரல்கள் கச்சா எண்ணெய் வாங்கியுள்ளது.
இது ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.2% அதிகம். கடந்தாண்டு ஜூலை மாதத்தின் ஒப்பீடுகளில் 12 % அதிகம் என்பது இந்தியன் ஷிப்மெண்ட்ஸ் வெளியிட்டுள்ள தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் ரஷ்யாவிடம் இருந்து சீனா ஒரு நாளைக்கு 1.76 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் வாங்கியுள்ள நிலையில் இந்தியா 2.07 மில்லியன் பேரல்களை வாங்கி இருக்கிறது. எனவே தற்போது ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது.
ஏனெனில் மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகள் காரணமாக ரஷ்ய நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுக்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்கின்றன. இதன் காரணமாக இந்திய நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வாங்கி அவற்றை பெட்ரோல் டீசலாக மாற்றி விற்பனை செய்கின்றன.
இந்தியாவில் ரஷ்யா கச்சா எண்ணெய்க்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் கூறப்படுகிறது. அதே வேலையில் சீன நிறுவனங்கள் ரஷ்யாவிடம் எண்ணெயை வாங்கி அதனை மற்ற எரிபொருளாக மாற்றுவது தங்களுக்கு குறைந்த லாபம் கொண்டதாக இருப்பதாக கருதுவதால் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்து விட்டன.
கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதனை அடுத்து மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீதும் ரஷ்யாவை சார்ந்த நிறுவனங்கள் மீதும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. மேலும் ரஷ்ய நிறுவனங்களிடமிருந்து எந்த பொருட்களையும் வாங்க கூடாது என பல்வேறு நாடுகளுக்கும் அறிவுறுத்தின. ஆனால் உக்ரைன் போரை தொடர்ந்து ரஷ்யா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான வர்த்தகம் உயர்ந்துள்ளது.
எண்ணெய் மற்றும் உரங்கள் ஆகியவற்றை இந்தியா பெருமளவில் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்கிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அரசு ரஷ்யாவுடனான வர்த்தகத்தை அதிகரித்துள்ளது.
இதனை பயன்படுத்திக் கொண்டு ரஷ்ய நிறுவனங்களும் இந்திய நிறுவனங்களுக்கு தள்ளுபடி விலையில் எண்ணெய் மற்றும் உரம் ஆகியவற்றை விற்பனை செய்கின்றன. ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக இந்தியா ஈராக்கிடமிருந்து அதிகளவிலான கச்சா எண்ணெய் வாங்குகிறது இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் சவுதி அரேபியா இருக்கிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications