பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கிய ஈரான் போர் இதுவரை சமாதானத்தை நோக்கி செல்லவே இல்லை. தற்போதைக்கு தாக்குதல்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தாலும் ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் அமெரிக்காவும் ஈரானும் எந்த ஒரு முடிவையும் எட்டாமலேயே இருக்கின்றன. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி உள்ளிட்டவை இரண்டு மாதங்களுக்கும் மேலாக சப்ளை செய்யப்படாமல் இருக்கிறது.
இந்தியா தனக்கு தேவையான பெருபான்மையான கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி, உரம் ஆகியவற்றை வளைகுடா நாடுகளில் இருந்து தான் வாங்குகிறது. இரண்டு மாதமாக அந்த சப்ளை வரவில்லை. இதனால் இந்தியாவை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்கி பெட்ரோல், டீசல் ஆக சுத்திகரித்து நமக்கு விற்பனை செய்கின்றன. இதனால் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல், டீசல் விற்பனையிலும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் ,ஹெச்பி ஆகிய நிறுவனங்களுக்கு 20 ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் கூடிய விரைவில் பெட்ரோல் , டீசல் விலைகள் உயர்த்தப்படும் என தகவல் வெளியானது.

இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு முக்கியமான ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டு இருக்கிறார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நாடுகளிலும் கடுமையாக பெட்ரோல் ,டீசல் விலைகள் உயர்ந்துள்ளன என்றார். இந்தியா பெட்ரோல், டீசல் வாங்குவதற்காக செலவிடப்படும் அன்னிய செலாவணியை சேமிக்க , பெட்ரோல் டீசலை சிக்கனமாக பயன்படுத்துவது நம் அனைவரின் பொறுப்பு எனக் கூறியிருக்கிறார்.
மேலும் ஓராண்டு காலத்திற்கு மக்கள் தங்கம் வாங்க வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை வைத்திருக்கிறார். கடினமான பொருளாதார சூழ்நிலையில் நாட்டின் வளங்களை சேமிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தே வேலை செய்வது, ஆன்லைன் மீட்டிங் மற்றும் வீடியோ கான்ஃபரன்ஸ் போன்ற முறைகளுக்கு மக்கள் எளிதாக பழகிவிட்டனர். எரிபொருள் நுகர்வை மிச்சப்படுத்த இதே போன்ற ஒரு நடைமுறையை மீண்டும் ஊக்கப்படுத்த வேண்டும் எனக் கூறியிருக்கிறார். நாம் சேமிக்கும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலும் எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியா அந்நிய கலாவணி செலவிடுவதை குறைக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

மேலும் பொதுமக்கள் வெளிநாட்டு சுற்றுலாக்களை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் அவர் முன் வைத்திருக்கிறார். இவ்வாறு செய்வதன் மூலம் அந்நிய செலாவணியை சேமிக்க முடியும் என்றும் ஈரான் போரினால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை குறைக்க முடியும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டி இருக்கிறார். எனவே கொரோனா காலத்தைப் போன்ற சில கட்டுப்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகி இருப்பதையே பிரதமர் நரேந்திர மோடியின் இந்த வேண்டுகோள் சுட்டிக்காட்டுகிறது.
ஏற்கனவே பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் எனர்ஜி லாக்டவுன் அறிவிக்கப்பட்டு விட்டது. இந்தியாவும் விரைவில் எனர்ஜி லாக்டவுனை போன்ற ஒரு சூழலை நோக்கி தான் செல்கிறதோ என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் ஈரான் போர் தணியவில்லை, எப்போது போர் முடிந்து ஹார்முஸ் ஜலசந்தியில் வழக்கத்தை போல கச்சா எண்ணெய் விநியோகம் சீராகும் என்பது தெரிய வரவில்லை. இன்றே போர் நின்றாலும் கூட கச்சா எண்ணெய் விநியோகம் சீராவதற்கு பல மாதங்கள் ஆகும்.
இந்தியாவை பொறுத்தவரை தனக்கு தேவையான கச்சா எண்ணெயை வெளிநாடுகளில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்கிறது. போர் சூழல் காரணமாக கச்சா எண்ணெயை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி இருக்கிறது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்திருக்கிறது. எனவே நம் கையிருப்பில் இருக்கக்கூடிய அதிகபட்ச பணத்தை கொடுத்து தான் நாம் கச்சா எண்ணெயை வாங்கி பெட்ரோல் டீசல் ஆக மாற்றி பயன்படுத்துகிறோம்.
கச்சா எண்ணெய் வாங்கவே அதிக டாலரை பயன்படுத்த வேண்டி இருப்பதால் நம் கைவசம் அந்நிய செலாவணி இருப்பு குறைகிறது, இது நாட்டின் பொருளாதாரத்திலேயே தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே தான் பொதுமக்கள் அரசு பேருந்துகள் , மெட்ரோ போன்ற பொது போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்த வேண்டும் ஒரு நபர் தனியாக ஒரு காரை பயன்படுத்துவதற்கு மாற்றாக இரண்டு மூன்று பேர் சேர்ந்து பயன்படுத்த வேண்டும் என மோடி கேட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் மின்சார வாகனங்கள் , ரயில் போக்குவரத்து உள்ளிட்டவற்றை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
போர்க்களத்தில் நின்று தான் நாம் நாட்டிற்காக தியாகம் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது இது போன்ற நெருக்கடியான பொருளாதார சூழல்களின் போது பொறுப்புடன் செயல்படுவதும் ஒரு போர்க்களத்தில் நின்று நாட்டுக்காக போராடுவதற்கு சமம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications

