மத்திய பட்ஜெட் என்பது பொருளாதார அறிக்கை மட்டுமல்ல, ஆளும் கட்சியின் அரசியல் நிலைப்பாடுகளையும் முன்னுரிமைகளையும் வாக்காளர்களிடம் எடுத்துரைக்கும் ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கான பட்ஜெட் அறிவிப்புகள் தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
வரும் 1ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களை கவனத்தில் கொண்டு திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பாரக்கப்படுகிறது. அஸ்ஸாம் தவிர, மற்ற மூன்று மாநிலங்களிலும் பாஜக அல்லாத அரசுகள் ஆட்சி செய்கின்றன. உலகளாவிய சவால்களுக்கு மத்தியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இம்மாநிலங்களுக்கு சிறப்புத் திட்டங்களை அறிவிப்பாரா என்பது முக்கியக் கேள்வி. 'இரட்டை இஞ்சின்' வளர்ச்சி நன்மைகளை வாக்காளர்களுக்கு உணர்த்த பட்ஜெட் பயன்படலாம். 2025-2026 பட்ஜெட்டில் பீகாருக்கான அறிவிப்புகளும், மாநில அரசின் மகளிர் பணப் பரிமாற்றத் திட்டமும் தேசிய ஜனநாயகக் கூட்டணயின் வெற்றிக்கு உதவின.

வரவிருக்கும் பட்ஜெட்டில், மேற்கு வங்கம் மற்றும் கேரளாவுக்கான வளர்ச்சித் திட்ட அறிவிப்புகள் முக்கியத்துவம் பெறும். விரைவான வளர்ச்சி வாக்குறுதி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இந்தப் பகுதிகளில் ஒரு பெரிய பலமாக இருக்கும். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நான்காவது முறையாக ஆட்சி தொடர முயல, பாஜக அங்கு பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. கேரளாவில் பாஜக மூன்றாவது சக்தியாக இருப்பினும், அதன் செல்வாக்கு சீராக அதிகரித்து வருகிறது. மேற்கு வங்கத்தில் முதல் ஆட்சியை அமைக்க பாஜக கணிசமான அரசியல் முதலீடுகளைச் செய்து வருகிறது.
தமிழ்நாட்டில், மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக அதிக மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பெற்றுள்ளதால், 'இரட்டை இஞ்சின்’ செய்திக்கு அப்பால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சில கூடுதல் அம்சங்கள் தேவைப்படும். மாநிலத்தின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களுக்கான மரியாதையை பட்ஜெட் மூலம் வெளிப்படுத்த இக்கூட்டணி முயற்சி செய்யலாம். குறிப்பிட்ட சில பிரத்தியேக திட்டங்களையும் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுக்கிறது.
தமிழ்நாட்டில் கூட்டணியுடன் தான் பாஜக தேர்தலை சந்திக்கிறது. ஏற்கனவே ஆளும் திமுக ஆட்சியை தக்க வைக்க முயற்சி செய்யும் அதே வேளையில் மீண்டும் ஆட்சியை பிடிக்க அதிமுக கூட்டணியுடன் களம் இறங்குகிறது. இது ஒரு புறம் என்றால் சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜயின் தவெக ஆகியவையும் களத்தில் உள்ளன. எனவே தமிழ்நாடுக்கான திட்டங்களில் கவனம் அதிகம் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அஸ்ஸாமில் பாஜக ஏற்கனவே வலுவாக நிலைநிறுத்தப்பட்டிருப்பதால், பட்ஜெட் வாயிலாகப் பல பெரிய திட்டங்களை அறிவிக்க வேண்டிய அவசியம் நரேந்திர மோடி அரசுக்கு இல்லை. கடந்த சட்டமன்றத் தேர்தல்களில் இருந்ததைப் போலவே, திரிணாமுல் காங்கிரஸ் இம்முறையும் தீவிரமாக மாநில அடையாள அரசியலைக் கையாண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சவாலை எதிர்கொள்ள முயற்சிக்கிறது. மத்திய அரசு மேற்கு வங்கத்திற்கு எதிராகப் பாரபட்சம் காட்டுவதாகக் குற்றம் சாட்டி, தனது செல்வாக்கை வலுப்படுத்த இக்கட்சி முனைப்புடன் செயல்படுகிறது.


Click it and Unblock the Notifications