மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொடர்ச்சியான தனது ஒன்பதாவது மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1 அன்று மக்களவையில் தாக்கல் செய்கிறார். 7.4% பொருளாதார வளர்ச்சி மற்றும் நிச்சயமற்ற உலகளாவிய புவிசார் அரசியல் சூழலுக்கு மத்தியில், இந்த பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது. மூத்த அதிகாரிகள் குழு பட்ஜெட் தயாரிப்பில் அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு உதவியாக இருக்கிறது.
பிரதமர் மோடி 3.0 அரசின் மூன்றாவது முழு பட்ஜெட் இது. இந்த பட்ஜெட் வளர்ச்சி, நிதி ஒழுக்கம் மற்றும் உலகப் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதில் கவனம் செலுத்துகிறது. 2026-27 பட்ஜெட் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் அதிகாரிகள் யார் , அவர்களின் தகுதிகள் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

அனுராதா தாக்கூர், பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலாளர்: பட்ஜெட்டின் முதன்மை வடிவமைப்பாளர்; 2026-27க்கான பொருளாதார வரைபடம் மற்றும் பட்ஜெட் ஆவணங்கள் தயாரிப்பு பணிகளை மேற்பார்வையிடுகிறார். 1994 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான இவர், 2025 ஜூலை 1 அன்று பொறுப்பேற்ற பிறகு, துறைச் செயலாளராக இது இவரது முதல் பட்ஜெட். பொருளாதார விவகாரங்கள் துறையை வழிநடத்தும் முதல் பெண் ஐஏஎஸ் இவராவார்.
அரவிந்த் ஸ்ரீவஸ்தவா, வருவாய் துறைச் செயலாளர்: பட்ஜெட் உரையின் பகுதி பி-யில் உள்ள வரிக் கொள்கைகளுக்கு இவர் பொறுப்பு - நேரடி வரிகள் (வருமான வரி, கார்ப்பரேட் வரி) மற்றும் மறைமுக வரிகள் (ஜிஎஸ்டி, சுங்கவரிகள்) இதில் அடங்கும். வருவாய் செயலாளராக இது முதல் பட்ஜெட் ஆயினும், பட்ஜெட் பிரிவில் மற்றும் பிரதமரின் அலுவலகத்தில் பணியாற்றிய அனுபவம் இவருக்குண்டு. வருவாய் திரட்டல், சுங்க வரி மற்றும் டிடிஎஸ் சீரமைப்பில் இவரது பங்கு முக்கியமானது.
வம்லுன்மாங் வுவல்னம், செலவின துறைச் செயலாளர்: "பணப்பையின் காவலர்" எனப்படும் வுவல்னம், அரசுச் செலவினங்கள், மானியச் சீரமைப்பு, மத்திய திட்டங்களை மேற்பார்வையிடுகிறார். நிதி ஒழுக்கம், நிதிப் பற்றாக்குறை மேலாண்மை, அடுத்த நிதியாண்டுக்கான செலவின முன்னுரிமைகள் நிர்ணயிப்பதில் இவரது துறை முக்கியப் பங்கு வகிக்கிறது.

எம். நாகராஜு, நிதிச் சேவைகள் துறைச் செயலாளர்: இவர் தலைமையிலான நிதிச் சேவைகள் துறை, நிதிச் சேர்க்கை, சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் கவனம் செலுத்துகிறது. பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ஓய்வூதிய அமைப்புகளின் ஆரோக்கியத்தையும் கண்காணித்து, கடன் வளர்ச்சி, டிஜிட்டல் ஏற்பு மற்றும் நிதித் துறை சீர்திருத்தங்களையும் ஊக்குவிக்கிறது.
அருணிஷ் சாவ்லா, டிஐபிஏஎம் (DIPAM) துறைச் செயலாளர்: முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறைத் தலைவர் சாவ்லா, அரசின் முதலீட்டு விலக்கல், தனியார்மயமாக்கல் உத்திக்கு பொறுப்பு. மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் பங்குகளை விற்பதன் மூலம் வரி அல்லாத வருவாய் இலக்குகளை இத்துறை நிர்வகிக்கிறது.
கே. மோசஸ் சாலாய், பொதுத்துறை நிறுவன துறைச் செயலாளர்: தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் மூலதனச் செலவினத் திட்டங்களை சாலாய் மேற்பார்வையிட்டு, பட்ஜெட் ஒதுக்கீடுகள் திறம்படப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்கிறார். சொத்து பணமாக்கல் முயற்சிகள் மற்றும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் நிதி ஆரோக்கியத்தையும் இத்துறை உன்னிப்பாகக் கண்காணிக்கிறது.
வி. அனந்த நாகேஸ்வரன், தலைமைப் பொருளாதார ஆலோசகர்: தலைமைப் பொருளாதார ஆலோசகர் அலுவலகம் பட்ஜெட்டிற்கான முக்கிய பேரியல் பொருளாதார உள்ளீடுகளை வழங்குகிறது. இதில் வளர்ச்சி கணிப்புகள், வேளாண்மை, தொழில், சேவைகள் துறைகளின் பகுப்பாய்வுகள், உலகளாவிய அபாய மதிப்பீடுகள் அடங்கும். நிதியமைச்சருக்கு பொருளாதார சீர்திருத்தங்கள், நிதி கொள்கை, நிதி உத்தி குறித்து அலுவலகம் ஆலோசனை வழங்குகிறது.
இக்குழு ஒட்டுமொத்தமாக பட்ஜெட் 2026-27ன் முதுகெலும்பாகச் செயல்பட்டு, சவாலான உலகளாவிய சூழலில் வளர்ச்சி இலக்குகள் மற்றும் நிதி ஒழுக்கத்திற்கு இடையே சமநிலையை அடைய அரசாங்கத்தின் கொள்கைத் தேர்வுகளை வடிவமைக்கிறது.


Click it and Unblock the Notifications