மத்திய அரசின் 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் இந்தியாவில் பிப்ரவரி மாதத்தின் கடைசி நாள் தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் 2017ஆம் ஆண்டு முதல் அது பிப்ரவரி 1ஆம் தேதி என மாற்றப்பட்டது.
2017ஆம் ஆண்டு முதல் தவறாமல் பிப்ரவரி 1ஆம் தேதி தான் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையாக வருவதால், பட்ஜெட் தாக்கல் தேதி குறித்து நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்னும் முடிவு செய்யவில்லை.

ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமைகளில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் அறிவிப்புகள் ஞாயிற்றுக்கிழமையில் வெளியானால், விடுமுறை என்பதால் மக்கள் வீட்டில் இருப்பார்கள். இதனால் பட்ஜெட் உரையை அதிக மக்கள் நேரடியாக பார்ப்பார்கள் என்றும், அதில் உள்ள அம்சங்கள் தங்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை புரிந்துகொள்வார்கள் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது மக்களிடையே பட்ஜெட் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும்.
முன்மாதிரியாக, கடந்த 2025ஆம் ஆண்டில் பிப்ரவரி 1ஆம் தேதி சனிக்கிழமையாக இருந்தபோதும், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கையும் சமர்ப்பிக்கப்படும். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு பட்ஜெட் கூட்டத்தொடருக்கான இறுதித் தேதிகளை இன்னும் முடிவு செய்யவில்லை.
இருந்தாலும் பாரம்பரியத்தை மாற்றாமல் பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுகிழமையாக இருந்தாலும் அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும், என்றே சொல்லப்படுகிறது. தற்போதைக்கு, பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. வரவிருக்கும் பட்ஜெட்டில் உற்பத்தித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மக்களை உள்ளடக்கிய பட்ஜெட்டை உருவாக்க, 'இந்தியாவுக்கான உங்கள் யோசனைகள்’ (Your Ideas For India) என்ற தலைப்பில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் #MyGov திட்டம் மூலம் அரசு அழைத்துள்ளது.
இது நாட்டின் வளர்ச்சிக்கும், அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கும் உதவும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், பிரதமர் நரேந்திர மோடி கடந்த கூட்டத்தொடரின்போதே, அனைத்து NDA பாராளுமன்ற உறுப்பினர்களிடமும், தங்கள் தொகுதி மக்களிடம் இருந்து பட்ஜெட் குறித்த ஆலோசனைகளைப் பெற்று சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.


Click it and Unblock the Notifications