ஈரானும் அமெரிக்காவும் மீண்டும் பரஸ்பரம் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில் இந்திய மாலுமிகள் இருந்த சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சியை தந்துள்ளது. ஓமன் கடற்கரை அருகே ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரான் இந்த கப்பலை தாக்கியதாக சொல்லப்படுகிறது.
ஹார்முஸ் ஜலசந்தியில் இன்று காலை சென்று கொண்டிருந்த GFS Galaxy என்ற சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சைப்ரஸ் நாட்டு கொடியுடன் பயணித்த இந்த கப்பல், மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை தாக்குதல் நடத்தியுள்ளது. தங்கள் எச்சரிக்கையை மீறி இந்த கப்பல் சென்றதாக கூறி, எச்சரிக்கையாக தாக்குதல் நடத்தியதாகவும் அதில் கப்பலின் எஞ்சின் அறை சேதமடைந்ததாகவும் ஈரான் தரப்பு கூறுகிறது. இதனால் கப்பலில் தீப்பிடித்தது. உடனடியாக கப்பல் ஊழியர்கள் மாலுமிகள் கப்பலில் இருந்து அவசர அவ்சரமாக வெளியேறியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான இந்தக் கப்பலில் மொத்தம் 11 இந்தியர்கள் வேலை செய்துள்ளனர். இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கப்பலில் இருந்த 11 பேரில், தற்போது வரை 10 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர், ஒருவர் இன்னும் கண்டறியப்படவில்லை; அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளது.
ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம், ஓமன் நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறது என கூறிஉள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த பிராந்தியத்தில் சரக்கு கப்பல்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள் மிகவும் கவலைக்குரியவை. இது அமைதியையும், கடல்வழி வர்த்தகத்தையும் பாதிக்கிறது என கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் மோதல்கள் காரணமாக இந்த பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளதால் அதை தணிக்க உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை திரும்புவதற்கு இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு, எவ்விதத் தடையுமின்றி சரக்கு கப்பல்கள் பயணிப்பதை உறுதி செய்ய வேண்டும். சரக்கு கப்பல்களையும், பொதுமக்களின் கட்டமைப்புகளையும் தாக்குவது நிறுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
முன்னதாக சரக்கு கப்பலை தாக்கியதாகக் குற்றம் சாட்டி, ஈரானின் 140-க்கும் மேற்பட்ட இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடுவதாக அறிவித்துள்ளதால் பதற்றம் இன்னும் அதிகமாகியுள்ளது.


Click it and Unblock the Notifications

