ஒவ்வொரு நாட்டுக்கும், அதன் பொருளாதார வளர்ச்சியை அளவிட ஜிடிபி தொகை இருக்கும். அதே போல அந்த நாடு எவ்வளவு கடன் வாங்கி இருக்கிறது என்கிற தொகை விவரங்கள் இருக்கும்.

ஒரு நாட்டின் debt to GDP ratio கண்டு பிடிக்க வேண்டும் என்றால், அந்த நாடு வாங்கி இருக்கும் மொத்த கடன் தொகையை, அந்த நாட்டின் ஒட்டு மொத்த ஜிடிபி தொகையால் வகுத்தால் அந்த நாட்டின் மொத்த debt to GDP ratio கிடைத்து விடும்.
உதாரணமாக ஒரு நாட்டின் மொத்த கடன் தொகை 15 ரூபாய். அந்த நாட்டின் மொத்த ஜிடிபி 100 ரூபாய். ஆக 15 / 100 * 100 = 15% தான் அந்த நாட்டின் debt to GDP ratio.
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கியின் முதன்மைப் பொருளாதார வல்லுநர் முனைவர் செளம்ய காந்தி கோஷ் "Ecowrap" என்கிற பெயரில் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், 2020 - 21 நிதி ஆண்டில், இந்தியாவின் debt-to-GDP ratio 87.6 சதவிகிதத்தை தொடலாம் எனக் கணித்து இருக்கிறார். இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இந்தியாவின் கடன் 170 லட்சம் கோடி ரூபாயைத் தொடலாம். இந்த 170 லட்சம் கோடி ரூபாய் என்பது, இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 87.6 சதவிகிதமாக இருக்கும் எனக் கணித்து இருக்கிறார்.
இதோடு, வெளிநாட்டுக் கடனாக (External Debt) 6.8 லட்சம் கோடி ரூபாய் (இந்திய ஜிடிபியில் 3.5 சதவிகிதம்) அதிகரிக்கலாம் எனவும் மதிப்பிட்டு இருக்கிறார்.
தற்போது கடன் வாங்குவது ஒரு பக்கம் அதிகரித்தாலும், ஜிடிபி வளர்ச்சி குறைவதால், debt-to-GDP ratio 4 சதவிகிதம் அதிகரிக்கலாம் எனவும் சொல்லி இருக்கிறார் செளம்ய காந்தி கோஷ்.
ஒரு நாட்டுக்கு debt-to-GDP ratio ஏன் அவசியமாகிறது? ஒரு நாட்டில் debt-to-GDP ratio குறைவாக இருக்கிறது என்றால், அந்த நாட்டு பொருளாதாரம் மேற் கொண்டு எந்த கடனும் வாங்காமல், பொருட்களை உற்பத்தி செய்யவோ, பொருட்கள் & சேவைகளை விற்று, கடன்களை திருப்பிச் செலுத்த முடியும்.
கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவின் debt-to-GDP ratio தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 2011 - 12 நிதி ஆண்டில் 58.8 லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடன் (debt-to-GDP ratio 67.4%), கடந்த 2019 - 20 நிதி ஆண்டில் 146.9 லட்சம் கோடி ரூபாயாக (debt-to-GDP ratio 72.2%) அதிகரித்து இருக்கிறது.
ஒரு நாடு என்றால் தன் இஷ்டத்துக்கு கடனை வாங்கிக் கொண்டே போக முடியுமா? என்றால் முடியாது. இந்தியாவைப் பொருத்த வரை Fiscal Responsibility and Budget Management (FRBM) என்கிற அமைப்பு, 2022 - 23 நிதி ஆண்டுக்குள் இந்தியாவின் கடன், அதன் ஒட்டு மொத்த ஜிடிபியில் 60 சதவிகிதம் வரை மட்டுமே இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து இருக்கிறது.
தற்போது இருக்கும் பொருளாதார சூழலில், ஜிடிபி வேறு பாதிக்கப்பட்டு இருப்பதால், இந்த FRBM அமைப்பு நிர்ணயித்த இலக்கை அடைய 2022 - 23 நிதி ஆண்டில் இருந்து கூடுதலாக 7 ஆண்டுகள் ஆகலாம். அதாவது 2029 - 30 வரை, இந்தியாவின் கடன், அதன் ஒட்டு மொத்த ஜிடிபியில் 60 சதவிகிதத்துக்குள் கொண்டு வர காலம் தேவைப்படலாம் எனச் சொல்லி இருக்கிறார்.