பாகிஸ்தானின் கிரானா மலைகளில் (kirana hills) அணு ஆயுத தளம் இருப்பதாக கூறப்படும் நிலையில், இதை இந்திய ராணுவம் தாக்கியதாக பரவிய வதந்திகளை திங்கள்கிழமை இந்திய தரப்பில் மறுக்கப்பட்டு உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் மத்தியிலான போர் வெடித்த போது இது அணு ஆயுத போராக மாறிவிடுமோ என்ற அச்சம் இந்திய மக்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் உலக முழுவதும் இருந்தது. இதேபோன்ற அச்சம் உக்ரைன் - ரஷ்ய போரின் போது உருவானது.
இந்த நிலையில் இந்திய ராணுவம் கிரானா மலையில் இருக்கும் அணு ஆயுத தளத்தை திட்டமிட்ட தாக்கியதாக வதந்திகள் பரவி வந்தன. இந்த நிலையில் விமானப்படை மார்ஷல் ஏ.கே. பார்தி செய்தியாளர்கள் சந்திப்பின் போது "நாங்கள் கிரானா மலைகளில் எது இருந்தாலும் சரி, நாங்கள் அங்கு எவ்விதமான தாக்குதலையும் நடத்தவில்லை" என தெரிவித்தார். இந்திய ஆயுதப்படைகளின் 'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றிகரமாக முடிந்ததாகவும், தீவிரவாதிகளை மட்டுமே இலக்காகக் கொண்டதாகவும் ராணுவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

கிரானா மலைகள் குறித்த வதந்திகள் என்ன?: பாகிஸ்தானில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கங்களை, இந்தியாவின் கிரானா மலைகள் மீதான தாக்குதலுடன் தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவின. சர்கோதா (Sargodha) விமானத் தளத்திற்கு அருகிலுள்ள கிரானா மலைகளில் அணு ஆயுத வசதி இருப்பதாகவும், இந்தியா அதைதாக்கியதாகவும் கூறப்பட்டது.
விமானப்படை மார்ஷல் ஏ.கே. பாரதி, இந்த வதந்திகளை மறுத்து, "கிரானா மலைகளில் அணு வசதி இருப்பதாக எங்களுக்கு தெரியாது, அதை தெரிவித்ததற்கு நன்றி," என கிண்டலாக செய்தியாளர் சந்திப்பில் கூறினார். அவர், இந்திய ஆயுதப்படைகள் தீவிரவாதிகளையும் அவர்களின் ஆதரவு அமைப்புகளையும் மட்டுமே இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும், பாகிஸ்தான் ராணுவத்தை தாக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
ஆபரேஷன் சிந்தூர் வெற்றி வீடியோ ஆதாரம்: இந்திய ஆயுதப்படைகளின் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து, விமானப்படை மார்ஷல் ஏ.கே. பார்தி, ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய், மற்றும் கடற்படையின் வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத் ஆகியோர் கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் விவரித்தனர். இந்த சந்திப்பில், பாகிஸ்தானின் ஆயுத தளவாடங்களை துல்லியமாக அழித்ததற்கான வீடியோ ஆதாரங்களை இந்திய ராணுவ தரப்பில் வெளியிட்டது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் பல ராணுவ தொழில்நுட்ப கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
நியூயார்க் டைம்ஸின் அறிக்கையின்படி, பாகிஸ்தானின் அணு ஆயுத திட்டத்தை அறிந்த முன்னாள் அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், பாகிஸ்தானின் மிகப்பெரிய அச்சம் என்னவென்றால் அதன் அணு ஆயுத சக்தியை இழந்துவிடுவோமோ என்பது தான் என்று கூறினார்.
இந்திய ராணுவம் நூர் கான் விமானத் தளத்தில் இந்தியா செய்த ஏவுகணை தாக்குதல், இந்தியாவுக்கு அத்தகைய தொலைதூர இலக்குகளை தாக்கும் திறன் இருப்பதை சிக்னலாக காட்டியுள்ளது என்று அவர் கூறினார். இருப்பினும், இந்தியா தனது தாக்குதல்கள் தீவிரவாதிகளை மட்டுமே இலக்காகக் கொண்டவை என வலியுறுத்தியுள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத்தின் திறன் தற்போது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications