இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் (EU) நீண்டகால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) வெற்றிகரமாக முடித்துள்ளன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் 27 நாடுகள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு விதிக்கப்படும் வரி 110 சதவீதத்திலிருந்து படிப்படியாக 10 சதவீதமாக குறைக்கப்படும். மேலும் ஆண்டுக்கு 2.5 லட்சம் வாகனங்கள் வரை இந்த வரி குறைப்பு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்புடன் போராடும் இந்தியாவுக்கு இந்த புதிய FTA ஒப்பந்தம் மூலம் புதிய சந்தை திறந்துள்ளது. இந்தியா ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளுக்கு பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களையும், சேவைகளையும் ஏற்றுமதி செய்து வரும் வேளையில், தற்போது செய்யப்பட்டு உள்ள ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் இருந்து ஜவுளி, ஆடைகள், நகைகள், கெமிக்கல், மருந்துப் பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பை பெற உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் 27 நாடுகள்
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் 27 நாடுகளின் பட்டியல்.
ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, சைப்ரஸ் குடியரசு, செக்கியா, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லாட்வியா, லிதுவேனியா, லக்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன்.
இந்த FTA ஒப்பந்தம் இரு தரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்தும் முக்கிய படியாக உள்ளது. 2024-25ஆம் ஆண்டில் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகம் மதிப்பு மட்டும் 190 பில்லியன் டாலரை தாண்டியது.
இந்தியா ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு 75.9 பில்லியன் டாலர் பொருட்களையும் 30 பில்லியன் டாலர் சேவைகளையும் ஏற்றுமதி செய்தது. இதேபோல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்தியாவிற்கு 60.7 பில்லியன் டாலர் பொருட்களையும் 23 பில்லியன் டாலர் சேவைகளையும் ஏற்றுமதி செய்தது.

ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட பொருட்களுக்கு வரி முழுமையாக அல்லது பெரும்பாலும் குறைக்கப்படும். இயந்திரங்கள் மீதான 44 சதவீதம் வரை உள்ள வரி, கெமிக்கல் மீதான 22 சதவீதம், மருந்து பொருட்கள் மீதான 11 சதவீதம் போன்ற உயர் வரிகள் படிப்படியாக நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ஐரோப்பிய பீர் மீதான வரி 50 சதவீதமாக குறைக்கப்படும். கெமிக்கல், விமானங்கள் மற்றும் விண்வெளி தொழில்நுட்ப பொருட்களில் பெரும்பாலானவற்றுக்கு வரி முழுமையாக நீக்கப்படும்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உடனான இந்த ஒப்பந்தத்தால் 2032ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கான ஏற்றுமதியை இரட்டிப்பாக்க முடியும் என்று எதிர்பார்க்கிறது. ஐரோப்பிய பொருட்களுக்கு ஆண்டுக்கு 4 பில்லியன் யூரோ வரை வரி சேமிப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில். EU-இந்தியா செக்யூரிட்டி மற்றும் டிபென்ஸ் கூட்டுறவு தொடங்கப்பட்டது. இது வர்த்தக ஒப்பந்தத்துடன் இணைந்து இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications