இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் (EU) நீண்டகால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) வெற்றிகரமாக முடித்துள்ளன. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு விதிக்கப்படும் வரி 110 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு 2.5 லட்சம் வாகனங்களுக்கு இந்த குறைந்த வரி வசதி வழங்கப்படும். இது இந்தியா மற்ற நாடுகளுக்கு வழங்கிய கோட்டாவை விட 6 மடங்கு அதிகமான அளவாகும்.
இதேபோல் இந்திய கார்களுக்கும், இந்திய ஆட்டோமொபைல் உதிரிபாகங்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் ஜீரோ வரி சலுகையை அளித்துள்ளதால், இது இரு தரப்புக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.

கார் விற்பனை அடிப்படையில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய கார் சந்தையாக உள்ளது. தற்போது 40,000 டாலருக்கு கீழ் உள்ள இறக்குமதி கார்களுக்கு 70 சதவீத வரியும், அதற்கு மேல் உள்ளவற்றுக்கு 110 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது.
FTA ஒப்பந்தத்தின் கீழ் வரி சலுகை பெறும் 2.5 லட்சம் கார் கோட்டாவில் 1.6 லட்சம் பெட்ரோல்/டீசல் என்ஜின் கார்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் வரி 10 சதவீதமாக குறையும். மீதமுள்ள 90,000 மின்சார வாகனங்களுக்கு (EV) வரி 10ஆம் ஆண்டில் தான் 10 சதவீதமாக குறையும். இது இந்தியாவின் வளரும் மின்சார வாகன சந்தையை பாதுகாக்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்டு உள்ள முடிவாக உள்ளது. இந்த கோட்டாவுக்குள் இறக்குமதி செய்யப்படும் கார்களின் ஆரம்ப வரி பெரும்பாலான பிரிவுகளுக்கு 30 சதவீதமாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 2.5 லட்சத்திற்கும் அதிகமாக இறக்குமதி செய்யப்படும் பெட்ரோல்/டீசல் கார்களுக்கு 10 ஆண்டுகளில் வரி 35 சதவீதமாக குறையும். இது தற்போதைய 110 சதவீத வரியை விட குறைவான அளவாகும். இந்த ஒப்பந்தம் வோல்க்ஸ்வாகன், ரெனால்ட், ஸ்டெல்லான்டிஸ் போன்ற ஐரோப்பிய கார் நிறுவனங்களுக்கும், மெர்சிடிஸ்-பென்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற சொகுசு பிராண்டுகளுக்கும் ஜாக்பாட் ஆக அமையும். இந்தியாவில் உள்ளூர் உற்பத்தி செய்யும் இந்த நிறுவனங்கள் அதிக வரி காரணமாக அதிக விலையுடன் விற்கப்படும் காரணத்தால் வர்த்தக எண்ணிக்கை குறைவாக உள்ளது.
இந்திய கார் நிறுவனங்களுக்கும் பயன்
இந்த FTA ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு சாதகமான விதிகளும் உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தில் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி போன்ற நிறுவனங்கள் ஆண்டுக்கு 6.25 லட்சம் வாகனங்கள் வரை குறைந்த வரியில் ஏற்றுமதி செய்யலாம்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் 10 ஆண்டுகளில் வரி முழுமையாக நீக்கப்படும். சிறிய, குறைந்த விலை மின்சார வாகனங்கள் 14 ஆண்டுகளில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும். ஐந்தாம் ஆண்டில் 27,500 யூனிட்களில் தொடங்கி, பின்னர் 1.25 லட்சம் யூனிட்களாக உயரும்.
மேலும், ஐரோப்பிய நிறுவனங்கள் 15,000 யூரோவுக்கு மேல் விலை கொண்ட 75,000 கார்களை முழுமையாக துண்டாக்கப்பட்ட கிட் (CKD) வடிவில் இந்தியாவுக்கு அனுப்பி இங்கு அசெம்பிள் செய்யலாம். இதற்கான வரி 16.5 சதவீதத்திலிருந்து 8.25 சதவீதமாக குறையும்.
மேலும் கார் உதிரி பாகங்களுக்கு வரி முழுமையாக இரு நாடுகளும் நீக்குகிறது. இது இந்தியா-ஐரோப்பா இடையேயான சப்ளை செயினை வலுப்படுத்தும். ஐரோப்பிய நாடுகள், இந்திய ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் ஏற்றுமதிக்கு முக்கிய சந்தையாக உள்ளது.
இந்த ஒப்பந்தம் இந்தியாவின் கார் சந்தையை மேலும் திறந்து விடுவதோடு, உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு ஐரோப்பிய சந்தையில் பெரிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. மின்சார வாகன துறையை பாதுகாக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், இரு பக்கங்களுக்கும் சமநிலையான நன்மைகளை அளிக்கும். சாமானிய மக்களுக்கு உயர்தர ஐரோப்பிய கார்கள் மலிவாக கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications