டெல்லி: அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய ஐபோன் ஏற்றுமதிக்கு பெருமளவில் சீனாவையே சார்ந்திருந்த நிலையில் தற்போது அது மாற்றமடைந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்திற்கு ஐபோன் ஏற்றுமதி செய்ததில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னிலைக்கு வந்திருக்கிறது. OMDIA என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஐபோன்கள் ஏற்றுமதி கடந்த ஆண்டு ஏப்ரலுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஏப்ரலில் 76% உயர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளது. அதே வேளையில் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஐபோன் ஏற்றுமதி என்பது 76 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது.

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் உள்ளிட்டவற்றின் உற்பத்திக்காக பெருமளவில் சீனாவையே சார்ந்து இருந்தது. ஆனால் சீனாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே அடிக்கடி ஏற்படக்கூடிய வர்த்தக மோதல்கள் காரணமாக ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய ஐபோன் உற்பத்தியை இந்தியாவிற்கு படிப்படியாக இடம் மாற்றம் செய்து வருகிறது. அந்த வகையில் OMDIA என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் இந்தியாவிலிருந்து கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 30 லட்சம் ஐபோன்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
இதே காலகட்டத்தில் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஐபோன்கள் ஏற்றுமதி 76 சதவீதம் குறைந்து 9 லட்சங்களாக இருக்கிறது. முதன்முறையாக ஐபோன்கள் ஏற்றுமதியில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடித்திருப்பதாக இந்நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச இறக்குமதி வரியை விதித்தார்.
குறிப்பாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யபப்டும் பொருட்களுக்கு 150 சதவீத வரியை விதித்தார். இதனால் ஐபோன்கள் இறக்குமதிக்கு ஆப்பிள் நிறுவனம் அதிக செலவு செய்ய வேண்டி இருந்தது. எனவே தான் சீனாவை விடுத்து இந்தியாவில் இருந்து அதிக போன்களை இறக்குமதி செய்தது.
முன்னதாக ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிம் குக் ஜூன் மாத காலாண்டில் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படக்கூடிய பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டவையாக இருக்கும் என தெரிவித்திருந்தார். அந்த வகையில் ஏப்ரல் மாதத்திற்கு பின்னரும் இந்தியாவிலிருந்து அதிக அளவிலான ஐபோன்கள் உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது உறுதியாகி இருக்கிறது.
அமெரிக்காவை பொறுத்தவரை ஒவ்வொரு காலாண்டிற்கும் 20 மில்லியன் ஐபோன்கள் தேவைப்படுகிறது, இந்தியாவில் தற்போது ஒரு காலாண்டுக்கு 20 மில்லியன் ஐபோன்களை உற்பத்தி செய்யும் திறன் இல்லை 2026 ஆம் ஆண்டில் தான் இந்திய உற்பத்தி நிறுவனங்கள் அந்த நிலையை எட்டும் என சொல்லப்படுகிறது. இந்தியாவில் ஃபாக்ஸ்கான், டாடா ஆகிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலைகளை அமைத்து ஐபோன்களை உற்பத்தி செய்கின்றன.


Click it and Unblock the Notifications