மின்சாரத்தை ஏற்றுமதி செய்யும் இந்தியாவில் அடிக்கடி மின்தடை வருது ஏன்..?

இந்தியா இன்று உலகின் முன்னணி மின்சார உற்பத்தி நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. பல்வேறு வகையான மின் உற்பத்தி முறைகளை பயன்படுத்தி, பிற நாடுகளுக்கு மின்சாரத்தை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. ஆனாலும், இங்கு பல பகுதிகளில் தொடர்ந்து மின்தடை ஏற்படுவது பலருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது.

இதைச் சரியாக புரிந்து கொள்ள, முதலில் மின் உற்பத்தி மற்றும் அதன் பயன்பாட்டுக்கு இடையேயான சமநிலையைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா முழுவதும் மின்சாரம் தேவையில்லை என்றாலும் கூட, சில மாநிலங்களில் தொழில்துறை வளர்ச்சி, மக்கள் தொகை அடிப்படையில் அதிக மின்சாரம் தேவைப்படும் சூழல் உள்ளது. ஆனால், மின் உற்பத்தி நிலையங்கள் அனைத்து மாநிலங்களிலும் இல்லை. குறிப்பாக, நிலக்கரி, எரிவாயு அல்லது நீர்மின் ஆதாரங்கள் அதிகம் உள்ள பகுதிகளில்தான் அமைந்துள்ளன.

மின்சாரத்தை ஏற்றுமதி செய்யும் இந்தியாவில் அடிக்கடி மின்தடை வருது ஏன்..?
Photo Credit:

மற்றொரு முக்கியமான பிரச்சனை, எப்போது எந்த மூலப்பொருள் கிடைக்கும் என்பது குறித்து உறுதி இல்லை. நிலக்கரி தாமதமாக வந்தால், அந்த இடத்தில் மின் உற்பத்தி குறையும். பெரும்பாலும் மின்சாரம் சரியான நேரத்திற்கு விநியோகிக்கப்பட வேண்டிய ஒரு சேவையாக இருப்பதால், இதுவும் மின் தடை ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது.

மின் உற்பத்தி மட்டுமல்ல, அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வழிமுறைகளும் எப்போதும் சீராக இயங்க வேண்டும். ஆனால், இந்தியாவின் பல இடங்களில் மின்கம்பிகள், கேபிள்கள், டிரான்ஸ்ஃபார்மர்கள் போன்ற விநியோக உபகரணங்கள் பழுதடைந்து பராமரிப்பின்றி இருக்கின்றன. குறிப்பாக பழைய கட்டமைப்புகள் உள்ள இடங்களில், சிறிய கோளாறுகள் கூட மின் கசிவாக மாறி, அந்தப் பகுதியில் மின்விநியோகத்தைத் தடுக்கும் அளவுக்கு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சில சமயங்களில் ஒரு சிறிய இணைப்பு தவறுதலும் பெரிய அளவிலான மின்தடை உருவாவதற்கான காரணமாக இருக்கிறது.

மின்சார ஏற்றுமதி மற்றும் தாக்கங்கள் : பங்களாதேஷ், நேபாள், மியான்மர் போன்ற சில நாடுகளுக்கு இந்தியா மின்சாரம் ஏற்றுமதி செய்கிறது. இது நாட்டிற்கு வருமானத்தை ஏற்படுத்தும் ஒரு வாய்ப்பு தான். ஆனால், இந்த ஏற்றுமதிக்கு சிறப்பான ஒப்பந்தங்கள், குறிப்பிட்ட நேரம் மற்றும் இடவசதி தேவைப்படும். சில சமயங்களில், உள்ளூர் தேவை அதிகரிக்கும் போது கூட மின்சாரம் ஏற்றுமதி செய்யப்படும் நிலை உருவாகிறது. இதனால், அதே நேரத்தில் சில மாநிலங்களில் மின் தடை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதுவும், மக்களிடையே "மின்சாரம் இருக்கிறதே.. ஏன் தரவில்லை?" என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

மின்சாரத்தை ஏற்றுமதி செய்யும் இந்தியாவில் அடிக்கடி மின்தடை வருது ஏன்..?
Photo Credit:

இயற்கைச் சூழல் மாற்றங்கள் மற்றும் வறட்சி : இயற்கையின் தாக்கமும் மின்விநியோகத்தில் நேரடியாகப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக நீர்மின் உற்பத்தி (hydropower) அதிகமாக உள்ள பகுதிகளில், அணைகளில் நீர் அளவு குறைவடைந்தால் மின் உற்பத்தி நேரடியாக பாதிக்கப்படும். வறட்சியான காலங்களில் இது ஒரு முக்கியமான பிரச்சனையாக மாறும். அதே நேரத்தில், திடீர் புயல், கனமழை, மழை இல்லாத காலம் போன்றவை மின் கட்டமைப்புகளையே சேதப்படுத்தும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்தியாவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டவுடன், அது நேரடியாக வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் செல்லாது. இதற்கிடையில் ஒரு முக்கிய ஒழுங்கமைப்பு உள்ளது. அதாவது, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் செயல்படும் மின்விநியோக நிறுவனங்கள், பொதுவாக DISCOMs என அழைக்கப்படும். இந்த நிறுவனங்களே மின் உற்பத்தி நிலையங்களிடமிருந்து மின்சாரத்தை வாங்கி அதை நகரங்கள், கிராமங்கள், தொழிற்சாலைகள், குடியிருப்புகள் என அனைத்து இடங்களுக்கும் விநியோகம் செய்கின்றன. ஆனால், இப்போது ஒரு பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது.

பல மாநிலங்களில் உள்ள DISCOMs-கள் நஷ்டத்தில் தான் இயங்கி வருகின்றன. அவர்கள் வாங்கும் மின்சாரத்திற்கு உரிய தொகையை உற்பத்தியாளர்களுக்கு செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகளின்படி, 2023 மார்ச் மாதம் வரை இந்தியாவில் உள்ள அனைத்து DISCOMs-களும் சேர்த்து சுமார் ரூ.6 லட்சம் கோடி அளவுக்கு நஷ்டத்தில் உள்ளதாகவும், இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.4% என்ற அளவுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது.

மின்சாரத்தை ஏற்றுமதி செய்யும் இந்தியாவில் அடிக்கடி மின்தடை வருது ஏன்..?
Photo Credit:

இந்தியாவின் பல மாநிலங்களில் மின் விநியோக நிறுவனங்கள் நிதிச் சிக்கல்களில் மாட்டிக் கொண்டிருப்பதற்கு சில முக்கியக் காரணங்களும் உள்ளன. அதாவது, அரசுகள் பொதுமக்களுக்காக குறிப்பாக, குடிநீர் வழங்கும் அமைப்புகள், விவசாய பம்புகள் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு மின்சாரம் குறைந்த விலையிலே வழங்கப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. ஒரு வகையில், இது அரசியல் நோக்கில் நல்லது போல தெரிந்தாலும், விற்பனை தரவுகள் கூறுவது வேறு விதமாக உள்ளது.

உதாரணமாக, ஒரு DISCOM நிறுவனம் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.6-க்கு உற்பத்தியாளரிடமிருந்து வாங்கினால், அதை ரூ.3 அல்லது அதற்கும் குறைவாக பொதுமக்களுக்கு விற்க வேண்டும் என்பதே தற்போதைய நிலை. இதனால், வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்தாலும், நிறுவனங்கள் ஆண்டுக்கணக்கில் நஷ்டங்களை சந்திக்கின்றன.

இந்தியாவில் பல மின் உற்பத்தி நிலையங்கள் நீண்டகால ஒப்பந்தங்கள் மூலம் மின்சாரம் ஏற்கனவே விற்பனை செய்துள்ளன. இந்த ஒப்பந்தங்களில் உள்ளூரில் மட்டும் அல்ல. அண்டை நாடுகளான பங்களாதேஷ், நேபாள், பூட்டான் ஆகிய நாடுகளுடன் உள்ளன. உதாரணமாக, ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள Godda என்ற இடத்தில், அதானி பவர் நிறுவனம் ஒரு மின்சார உற்பத்தி நிலையத்தை முழுமையாக பங்களாதேஷுக்கு மின்சாரம் வழங்குவதற்காக கட்டியுள்ளது.

இதற்கிடையே, DISCOMs நிதி சிக்கலில் இருந்து விடுபட அரசு கடந்த சில ஆண்டுகளில் பல உதவித்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட UDAY திட்டம், மாநில அரசுகளுக்கு 75% கடன் பொறுப்பை மாற்றியது. இதன் மூலம் DISCOMs கடன் சுமையை குறைக்க முடிந்தது. மேலும், இழப்புகளை குறைத்து, வாடிக்கையாளர்களிடம் இருந்து பாக்கி தொகையை வசூலித்து, மின்சாரத்தை இழப்பின்றி விற்பனை செய்ய முடிந்தால், நஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடியும்.

இந்தியாவில் தற்போது MCX மற்றும் NSE போன்ற வர்த்தக நிறுவனங்கள், மாதாந்திர மின்சார ஒப்பந்தங்களை அறிமுகம் செய்துள்ளன. இதன் மூலம் மின்விநியோக நிறுவனங்கள் முன்கூட்டியே மின்சாரத்தின் விலையை கட்டுப்படுத்தி வைக்க முடியும். அதாவது, DISCOM-கள் மின்சார தேவையை கணிக்கும் கருவிகளை பயன்படுத்தி, வரும் மாதங்களில் எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும். பின்னர், MCX போன்ற சந்தைகளில் அந்த மின்சாரத்தை நிர்ணயிக்கப்பட்ட விலையில் வாங்கி வைக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

தீர்வு என்ன..?: மின் விநியோக நிறுவனங்கள் நஷ்டம் காரணமாக சரியாக செயல்பட முடியாததால் தான், பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே, முதலில் DISCOM-களின் நிதி நிலையை சீர்செய்ய வேண்டும். பின்னர், மின்சார விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தங்களை நவீன முறையில் மாற்றியமைக்க வேண்டும். மேலும், மின் வலையமைப்பிற்கும், கட்டமைப்புக்கும் அதிக முதலீடு செய்ய வேண்டும். இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்தால் தான், அனைத்து வீடுகளுக்கும் முழுவதுமாக மின்சாரம் வழங்கி, வெளிநாடுகளுக்கும் மின்சாரம் ஏற்றுமதி செய்வது சாத்தியமாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+