இந்தியாவில் கடந்த சில மாதங்களாக சர்க்கரை விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் சர்க்கரை விலை உயர்வு பல்வேறு பலகாரங்கள், இனிப்புகளின் விலைகளையும் உயர்த்தும். எனவே சர்க்கரை விலையை கட்டுப்படுத்த அரசு முக்கியமான ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது.
தீபாவளி காலங்களில் சர்க்கரை விநியோகத்தை சீராக பராமரிக்கும் பொருட்டு, சர்க்கரை இறக்குமதிக்கான வரி விலக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் வரி விலக்குடன் சர்க்கரை இறக்குமதி அனுமதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு வரும் 31ஆம் தேதியுடன் காலாவதி ஆகிறது. எனவே இந்த வரி விலக்கு சலுகையை வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வர்த்தகப் பொது இயக்குநரகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட கொள்கையின் கீழ், Exim Code 170114 என்ற பிரிவின் கீழ் வரும் பச்சை கரும்பு சர்க்கரையை வரி இல்லாமல் இறக்குமதி செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 20 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில், Tariff Rate Quota முறையின் கீழ் 10 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு சர்க்கரையை எந்தவித சுங்க வரியும் இல்லாமல் இறக்குமதி செய்ய அரசு அனுமதியளித்திருந்தது. தற்போதும் அந்த 10 லட்சம் மெட்ரிக் டன் என்ற அளவு மாறாமல் அப்படியே தொடர்கிறது. அதாவது, புதிய அளவு எதுவும் கூட்டப்படவில்லை; மாறாக ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அளவை இறக்குமதி செய்ய கூடுதலாக இரண்டு மாதங்கள் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்த மற்ற அனைத்து நிபந்தனைகளும் எந்தவித மாற்றமுமின்றி அப்படியே தொடர்ந்து பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உலகின் மிகப்பெரிய சர்க்கரை நுகர்வு நாடாக விளங்குகிறது. தீபாவளி பண்டிகை காலங்களில் உள்நாட்டில் சர்க்கரைக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும், விலையேற்றத்தை கட்டுப்படுத்தவும், உள்நாட்டு கையிருப்பை காக்கவும் இந்த முடிவு பெரிதும் உதவும்.
ஏற்கனவே ஈரான் போரால் பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது. இந்த சூழலில் சர்க்கரை விலையும் உயர்ந்து வருவது மக்களுக்கு நெருக்கடியை தந்தது. அதுவும் தீபாவளிக்கு பலரும் வீட்டிலேயே இனிப்பு, பலகாரம் அனைத்தும் செய்வார்கள். மேலும் கடைகளில் இனிப்பு விற்பனை அமோகமாக இருக்கும், இந்த சமயத்தில் சர்க்கரை விலை உயர்வு, சர்க்கரை தட்டுப்பாடு பெரும் சிக்கலை தரும் என்பதால் தான் அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications

