நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 2ஆவது நாளாக இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. ஈரான் போர் காரணமாக நேற்று தான் 4ஆவது முறையாக நாடு முழுவதும் பெட்ரோல் லிட்டருக்கு 2.46 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 2.57 ரூபாயும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் சப்ளை தடைபட்டு கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் ஆசிய நாடுகள் எங்கும் கச்சா எண்ணெய் கிடைக்காமல் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இலங்கை, பாகிஸ்தான் நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை மார்ச் மாதமே பல மடங்கு உயர்ந்தது. இந்தியாவில் ஷெல், நயாரா போன்ற தனியார் நிறுவனங்கள் பெட்ரோல் விலைகளை உயர்த்தின. ஆனால் ஹெச்பி, பாரத் பெட்ரோலிய, இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இரண்டரை மாதங்களாக பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தாமலேயே இருந்தன.

இந்நிலையில் முதன்முறையாக மே 15ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.14 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 3.11 ரூபாயும் அதிகரித்தன. இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள் மே 19ஆம் தேதி 2வது முறையாக பெட்ரோல் லிட்டருக்கு 87 காசுகளும், டீசல் லிட்டருக்கு 91 காசுகளும் அதிகரித்தன. மே 23ஆம் தேதி மீண்டும் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டன. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 87 காசுகள் உயர்ந்து 105.31 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 91 காசுகள் உயர்ந்து 96.98 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மே 25ஆம் தேதியான நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.46 ரூபாயும், டீசல் 2.57 ரூபாயும் உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை 4ஆவது முறையாக உயர்ந்ததால் வாகன ஒட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77 ஆக விற்பனையானது. டீசல் ஒரு லிட்டர் ரூ.99.55 ஆக விற்பனையானது. இந்த சூழலில் கடந்த 10 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை 5ஆவது முறையாக இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் ஈரான் போர் தொடங்கிய பின்னர் முதன்முறையாக நாடு முழுவதும் தொடர்ந்து 2ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்படுவது இதுவே முதன்முறையாகும். இதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 34 காசுகளும், டீசல் லிட்டருக்கு 23 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 34 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 108.01க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் டீசல் லிட்டருக்கு 23 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 99.78க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டு வருகின்றன. இதனால் பால், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். அதுமட்டுமில்லாமல் எண்ணெய் நிறுவனங்கள் பழைய முறைப்படி தினமும் பெட்ரோல், டீசல் விலைகளை மாற்றும் நடைமுறைக்கு திரும்பிவிட்டனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு இன்னும் 10 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications

