இந்திய பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.3 சதவீதம் வளர்ச்சி அடையும் எனத் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள முதல் முன்கூட்டிய கணிப்பில் தெரிவித்துள்ளது.
உலகில் முன்னணி பொருளாதாரங்கள் அனைத்தும் மந்தமான வளர்ச்சியை எதிர்கொண்டு வரும் வேளையில், இந்தியப் பொருளாதாரம் நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்து வரும் காரணத்தால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்திய சந்தையில் அதிகப்படியான முதலீட்டைச் செய்து வரும் வேளையில், 2024 ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி கணிப்புகள் பெரிய அளவில் நன்மை அளிக்கிறது.

மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டு உள்ள தகவல் படி 2023 ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7.2 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ள வேளையில், 2024 ஆம் நிதியாண்டில் 7.3 சதவீதம் வளர்ச்சி அடையும் என டிசம்பர் காலாண்டு முடிந்த பின்பு தனது முதல் முன்கூட்டியே அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
இதேபோல் நாமினல் ஜிடிபி அளவு 2024 ஆம் நிதியாண்டில் 8.9 சதவீதமாக இருக்கும் என்றும், இது 2023 ஆம் நிதியாண்டில் 16.1 சதவீதமாக இருந்தது எனவும் தெரிவித்துள்ளது. நாமினல் ஜிடிபி என்றால் நடப்பு விலையில், பணவீக்கத்தை வைத்து மறுகணக்கீடு செய்யாத அளவீடாகும்.
மேலும் கிராஸ் வேல்யூ ஆட்டெட் அளவு (GVA) அளவு நடப்பு நிதியாண்டில் 6.9 சதவீதமாக இருக்கும் என்றும், இது கடந்த நிதியாண்டில் 7 சதவீதமாகக் குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து தேசிய புள்ளியியல் அலுவலகம் நாட்டின் உற்பத்தித் துறை 6.5 சதவீதமாக உயரும் என வியக்க வைக்கும் தகவலை வெளியிட்டு உள்ளது. காரணம் கடந்த ஆண்டு உற்பத்தித் துறை வளர்ச்சி அளவீடு 1.3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஜிடிபியில் சுமார் 17 சதவீத பங்கீட்டைக் கொண்ட உற்பத்தித் துறை 1.3 சதவீத வளர்ச்சியிலிருந்து 6.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைவது மிக முக்கியமான விஷயம்.
இதேவேளையில் இந்திய ஜிடிபியில் 15 பங்கீட்டைக் கொண்ட விவசாயம், கால்நடைகள், காடுகள் & மீன்பிடித்தல் துறை கடந்த ஆண்டு 4 சதவீத வளர்ச்சி அடைந்த நிலையில் தற்போது 1.8 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.
பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இந்திய பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.3 சதவீதம் வளர்ச்சி அடையும் என்ற கணிப்பு முக்கியமானதாக விளங்குகிறது.


Click it and Unblock the Notifications