இந்திய அரசு அடுத்த 20 வருடத்தில் தனது விமான நிலைய உள்கட்டமைப்பை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. அதில் முதல் படியாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 புதிய விமான நிலையங்கள் மற்றும் அடுத்த 20 ஆண்டுகளில் மேலும் 200 விமான நிலையங்களை அமைக்கும் இலக்கை நிர்ணயித்துள்ளது மத்திய அரசு.
மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே. ராமமோகன் நாயுடு அறிவித்த இந்த திட்டம் மூலம் நாட்டின் அனைத்து பகுதிகளையும் வான்வழி போக்குவரத்து மூலம் இணைப்பதை அதிகரித்து நாட்டில் போக்குவரத்தை வேகப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என தெரிவித்தார்.

இதன் மூலம் இந்திய விமான போக்குவரத்து துறைக்கு குறைந்தது 4000 விமானங்கள் தேவைப்படும். தற்போது வெறும் 800 விமானங்கள் உடன் இயங்கி வருகிறது, இதேவேளையில் இந்திய விமான நிறுவனங்கள் சுமார் 1200 விமானங்களுக்கு ஆர்டர் செய்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி 157 ஆகியுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார். இந்தியாவில் அதிகரித்து வரும் சாமானிய மக்களின் வருமானம் மற்றும் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்க மக்கள் மூலம் விமானப் பயண தேவையின் அதிகரித்து தற்போது மிகப்பெரிய விரிவாக்கத்தை எதிர்நோக்கி இத்துறை காத்திருக்கிறது.
இந்தியாவின் விமானப் போக்குவரத்து துறையை மேலும் வலுப்படுத்த, மத்திய அரசு நவீன டெர்மினல், திறமையான விமானப் போக்குவரத்து மேலாண்மை அமைப்புகள் மற்றும் மேம்பட்ட சரக்கு வசதிகள் உள்ளிட்ட உலகத் தரம் வாய்ந்த விமான நிலைய உள்கட்டமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இது பயணிகள் அனுபவத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பொருளாதார நடவடிக்கைகளைத் தூண்டி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே. ராமமோகன் நாயுடு தெரிவித்தார்.
சிவில் விமானப் போக்குவரத்து செயலாளர் வும்லுன்மங் வாலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் விமானப் பயணிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி 440 மில்லியனை எட்டும் என்று தெரிவித்தார். இது விமானப் போக்குவரத்து துறைக்கு வலுவான வளர்ச்சிப் பாதையைக் குறிக்கிறது மற்றும் விமான நிலைய உள்கட்டமைப்பில் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.
இந்த திட்டங்களுடன், இந்தியா உலகளாவிய விமான போக்குவரத்து மையமாக மாறும் நிலையில் உள்ளது, அதன் பல்வேறு பிராந்தியங்களை இணைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகளுக்கு இடையூறின்றி பயணிக்க வழிவகுக்கும்.


Click it and Unblock the Notifications