2032 ஆம் ஆண்டில் இந்தியா அதிக சென்டி மில்லியனர்களை கொண்ட நாடாக இருக்கும் என்று அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
100 மில்லியன் டாலருக்கும் அதிகமாக சொத்து வைத்திருப்பவர்களை சென்டி மில்லியனர்கள் என்று கூறுவதுண்டு.
அந்த வகையில் இந்தியாவில் தற்போது சென்டி மில்லியனர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் 2032ஆம் ஆண்டில் அமெரிக்காவை அடுத்து இந்தியா அதிக சென்டி மில்லியனர்கள் கொண்ட நாடாக இருக்கும் என்றும் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. தற்போது அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து இந்தியா உலகிலேயே மூன்றாவது சென்டி மில்லியனர்களை கொண்ட நாடாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கம்
உலகில் பெரும் பகுதியில் பணவீக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக ஒரு பக்கம் பொதுமக்கள் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் பணக்காரர்கள் அதிபணக்காரர்களாக ஆகி வருகின்றனர் என்பதும் பன்னாட்டு நிறுவனங்களின் சி.இ.ஓக்களின் சம்பளம் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்டி மில்லியனர்கள்
இந்த நிலையில் தற்போது உலகின் முதல் சென்டி மில்லியனர்கள் எண்ணிக்கை குறித்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இந்தியாவில் தற்போது 1,132 சென்டி மில்லியனர்கள் உள்ளனர் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா-சீனா
உலக அளவில் அமெரிக்காவில் அதிக சென்டி மில்லியனர்கள் உள்ளனர் என்றும் அந்நாட்டில் மட்டும் 9,730 சென்டி மில்லியனர் உள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவை அடுத்து சீனாவில் 2021 சென்டி மில்லியனர்கள் உள்ளதால் அந்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் சென்டி மில்லியனர்கள்
இந்த நிலையில் இந்தியாவில் படிப்படியாக சென்டி மில்லியனர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து 2032 ஆம் ஆண்டு சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துவிடும் என்று அந்த அறிக்கை கணித்துள்ளது.
மும்பை
உலகின் அதிக சென்டி மில்லியனர்கள் கொண்ட நகரங்களில் ஒன்றாக மும்பை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நகரம் சென்டி மில்லியனர்கள் பட்டியலில் 15வது இடத்தில் உள்ளது. சான் பிரான்சிஸ்கோ, துபாய் உள்பட முக்கிய நகரங்களே முதல் 15 இடங்களில் இல்லாத நிலையில் மும்பை இடம்பெற்றுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் 5 இடங்கள்
அமெரிக்கா, சீனா இந்தியாவை அடுத்து அதிக சென்டி மில்லியனர்கள் கொண்ட பட்டியலில் 4வது இடத்தில் இங்கிலாந்து, ஐந்தாவது இடத்தில் ஜெர்மனி உள்ளது. இதனை அடுத்து சுவிட்சர்லாந்து, ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ரஷ்யா ஆகியவை 6 முதல் 10 இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications